நாடு முழுவதும் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம்: குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வாழ்த்து..!!
Author: Aarthi Sivakumar30 August 2021, 9:34 am
லக்னோ: நாட்டு மக்கள் அனைவருக்கும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
உத்தரபிரதேசத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், தனது மனைவி சவீதா கோவிந்த் உடன் 4 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அவர், அயோத்தி ராம் லல்லா கோவிலில் நேற்று வழிபாடு நடத்தினார்.
இதன் மூலம் இந்த கோவிலில் சாமி தரிசனம் செய்யும் முதல் குடியரசுத் தலைவர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். அயோத்தியில் பிரமாண்டமாக கட்டப்பட்டு வரும் ராமர் கோவிலின் கட்டுமான பணிகளை பார்வையிட்ட குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், அயோத்தி ராம் கதா பூங்காவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ராமாயண மேளாவை தொடங்கி வைத்தார். இதன்பின்பு அனுமன் கோவில், ராமர் கோவிலில் தனது மனைவி உடன் சென்று சாமி தரிசனம் செய்துள்ளார்.
தொடர்ந்து சிறப்பு ரெயில் ஒன்றில் அயோத்தியா நகரில் இருந்து லக்னோ நகருக்கு புறப்பட்டு சென்றார். அவர்களை ஆளுநர் ஆனந்திபென் பட்டேல், முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் வழியனுப்பி வைத்தனர். நாடு முழுவதும் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு நாட்டு மக்கள் அனைவருக்கும் கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துகள் என டுவிட்டரில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்து உள்ளார்.
0
0