பொருளாதாரத்தை மீட்டெடுக்க அனைவரும் ஒன்றிணைவோம்…! நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி அழைப்பு

14 August 2020, 8:52 pm
Quick Share

டெல்லி: பொருளாதாரத்தை மேம்படுத்த அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று நாட்டு மக்களுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் அழைப்பு விடுத்துள்ளார்.

நாட்டின் 74வது சுதந்திர தினம் நாளை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. அது குறித்து ராஷ்டிரபதி பவனில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் நாட்டு மக்களிடம் உரையாற்றி இருப்பதாவது:

தேசப்பிதா மகாத்மா காந்தி போன்ற தலைவர்களின் தியாகத்தால் தான் நாம் இன்று சுதந்திர திருநாட்டில் வாழ்ந்து வருகிறோம். இந்த கொரோனா தொற்றால் நாம் பல பாடங்களை கற்று வருகிறோம்.

இந்த சவாலை எதிர்கொள்வதற்காக சரியான நேரத்தில், சரியான நடவடிக்கையை மத்திய அரசு எடுத்து இருக்கிறது. கொரோனாவுக்கு எதிராக போராடி வரும் முன்கள சுகாதார பணியாளர்கள், மருத்துவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் தலை வணங்குகிறேன்.

கொரோனா போராட்டத்தில் உயிர் தியாகம் செய்த அனைவரையும் இந்த தருணத்தில் நான் வணங்குகிறேன். இந்தியா என்றுமே அமைதியை தான்  விரும்புகிறது. ஆனால் அதனை சீர்குலைத்தால் சரியான பதிலடி தரப்படும்.

இப்போது உள்ள சூழ்நிலையில் பொருளாதாரத்தை மீட்டெடுக்க நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். அறிமுகப்படுத்தப்பட்டு உள்ள புதிய கல்வி கொள்கையானது சிறப்புமிக்கது.

கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதில் வெற்றி கண்டுள்ளோம். இந்த தருணத்தில் பிரதமரின் கரீப் கல்யாண் திட்டம் பேருதவியாக இருந்து வருகிறது. ஏழைகள் அதனால் பலன் பெற்றுள்ளனர். சரியான நேரத்தில் அரசானது சரியாக நடவடிக்கை எடுத்துள்ளது என்றார்.