நெஞ்சுவலி காரணமாக குடியரசுத் தலைவர் மருத்துவமனையில் அனுமதி: நலம் விசாரித்தார் பிரதமர் மோடி…!!

Author: Aarthi Sivakumar
26 March 2021, 5:07 pm
Quick Share

புதுடெல்லி: குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதையடுத்து, டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவர், ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். ராம்நாத் கோவிந்தின் உடல்நிலை சீராக உள்ளதாகவும், மருத்துவர்கள் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து ராணுவ மருத்துவமனை வெளியிட்ட செய்திக்குறிப்பில்,

‘குடியரசுத் தலைவர் லேசான நெஞ்சுவலி இருப்பதாகக் கூறி ராணுவ மருத்துவமனைக்கு வந்தார். அவருக்கு வழக்கமான பரிசோதனைகள் நடத்தப்பட்டு, தற்போது மருத்துவர்கள் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார். தற்போது அவரின் உடல்நிலை சீராக இருக்கிறது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே வங்கதேசத்துக்கு இரு நாட்கள் பயணமாகச் சென்றுள்ள பிரதமர் மோடிக்கு, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உடல்நலக் குறைவு குறித்துத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து ராம்நாத் கோவிந்தின் மகனைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு நலம் விசாரித்துள்ளார். பிரதமர் அலுவலகம் வெளியிட்ட ட்விட்டர் பதிவில்,

‘குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் உடல்நிலை குறித்து அவரின் மகனிடம் தொடர்புகொண்டு பிரதமர் மோடி கேட்டறிந்தார். ராம்நாத் கோவிந்தின் உடல்நிலை குறித்துக் கேட்டறிந்து, அவர் விரைவாகக் குணமடையப் பிரார்த்திப்பதாகவும் மோடி தெரிவித்தார்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Views: - 63

0

0