சோம்நாத் கோவில் அறக்கட்டளை தலைவராக பிரதமர் மோடி தேர்வு: 2வது பிரதமர் எனும் பெருமையை பெறுகிறார்..!!

19 January 2021, 3:28 pm
modi somnath - updatenews360
Quick Share

புதுடெல்லி: குஜராத்தில் உள்ள புகழ்பெற்ற சோம்நாத் கோவில் அறக்கட்டளை தலைவராக பிரதமர் மோடி ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டார். முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய்க்கு பின் சோம்நாத் அறக்கட்டளையின் தலைவராக பொறுப்பேற்கும் 2வது பிரதமர் என்ற பெருமையை மோடி பெற்றுள்ளார்.

குஜராத்தின், கிர் சோம்நாத் மாவட்டத்தில் 12 ஜோதிர்லிங்கங்களில் முதன்மையான சோம்நாத் சிவன் கோவில் உள்ளது. இக்கோவில் அறக்கட்டளை தலைவராக இருந்த அம்மாநில முன்னாள் முதலமைச்சர் கேசுபாய் படேல், கடந்த 2020 அக்டோபர் மாதம் காலமானதை தொடர்ந்து, அந்த பதவி காலியாக இருந்தது. இதனையடுத்து புதிய தலைவரை தேர்வு செய்வதற்காக, நிர்வாகிகள் கூட்டம் வீடியோ கான்பரன்சிங் முறையில் கடந்த ஜனவரி 11ம் தேதி நடப்பதாக இருந்தது.

ஆனால், அன்றைய தினம் மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்துவதாக இருந்ததால் கூட்டம் 18ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. நேற்று நடைபெற்ற கூட்டத்தில், சோம்நாத் கோவில் அறக்கட்டளை தலைவராக பிரதமர் மோடி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். அந்த பதவிக்கு, மோடியின் பெயரை, உள்துறை அமைச்சர் அமித்ஷா பரிந்துரை செய்தார். இதனை அனைத்து உறுப்பினர்களும் வழிமொழிந்தனர்.

இதனையடுத்து, அறக்கட்டளை தலைவராக மோடி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். தற்போது, அறக்கட்டளை நிர்வாகிகளில் ஒருவராக மோடி உள்ளார். அறக்கட்டளை உறுப்பினர்களாக அமித்ஷா, பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி, கோல்கட்டாவை சேர்ந்த கட்டுமான நிறுவனமான அம்புஜா நியோடியா நிறுவன சேர்மன் ஹர்ஷ்வர்தன் நியோடியா, குஜராத் மாநில முன்னாள் தலைமை செயலர் பிரவின் லஹரி, ஓய்வு பெற்ற சமஸ்கிருத பேராசிரியர் வராவல், ஜீவன் பர்மர் ஆகியோர், உள்ளனர். இந்த அறக்கட்டளை உறுப்பினர் பதவிக்கு மத்திய, மாநில அரசுகள் தலா 4 பேரை பரிந்துரை செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 9

0

0