அமலாக்கத்துறை பிடியில் பிரியங்கா காந்தி… குற்றப்பத்திரிகையில் இடம்பெற்ற பெயர் : பாஜக போட்ட ஸ்கெட்ச்!!!

Author: Udayachandran RadhaKrishnan
28 December 2023, 5:05 pm
priyanka
Quick Share

அமலாக்கத்துறை பிடியில் பிரியங்கா காந்தி… குற்றப்பத்திரிகையில் இடம்பெற்ற பெயர் : பாஜக போட்ட ஸ்கெட்ச்!!!

அகில இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுச்செயலாளராக பதவி வகித்து வருபவர் பிரியங்கா காந்தி. இவர் அரியானா மாநிலத்தில் ஐந்து ஏக்கர் நிலத்தை வாங்கி விற்பனை செய்த விவகாரத்தில் அமலாக்கத்துறை தாக்கல் செய்து இருக்கும் குற்றப் பத்திரிகையில் முதன்முறையாக இவரது பெயரும் இடம்பெற்று உள்ளது.

அவரது கணவரும் தொழிலதிபருமான ராபர்ட் வதேராவின் பெயரும் இதில் சேர்க்கப்பட்டு உள்ளது. ஆனால், குற்றம்சாட்டப்படும் நபர்களின் பட்டியலில் அவர் இல்லை.

வெளிநாடு வாழ் இந்திய தொழிலதிபர் சி.சி. தம்பி மற்றும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரிட்டன் குடிமகனான சுமித் சாத்தா ஆகியோர் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இவர்கள் தலைமறைவாக இருக்கும் ஆயுத வியாபாரி சஞ்சய் பண்டாரியின் குற்றச்செயல்களை மறைக்க உதவி செய்ததாக அமலாக்கத்துறை கூறியுள்ளது.

கடந்த 2006 ஆம் ஆண்டு அரியானா மாநிலம் ஃபரிதாபாத்தில் உள்ள அமிபுர் கிராமத்தில் பிரியங்கா காந்தியின் பெயரில் வாங்கப்பட்ட வீட்டை, டெல்லியைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் முகவரான பாவாவிடம் விற்பனை செய்து இருப்பதாக அமலாக்கத்துறை தெரிவித்து உள்ளது.

இதே முகவரிடம்தான் அமிபுர் கிராமத்தில் கடந்த 2005 முதல் 2006 ஆண்டுகளுக்கு இடையே 40.8 ஏக்கர் நிலத்தை ராபர்ட் வதேரா வாங்கியதாகவும், அதை டிசம்பர் 2010 ஆம் ஆண்டு அவரிடமே விற்பனை செய்ததாகவும் கூறப்படுகிறது.

இதேபோன்ற ஒப்பந்த முறையை 2020 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்த தொழிலதிபர் சி.சி.தம்பி, 486 ஏக்கர் நிலத்தை வாங்கி விற்கும்போதும் பயன்படுத்தியுள்ளாராம். இந்த தொழிலதிபருக்கும் ராபர்ட் வதேராவுக்கும் இடையே நெருக்கமான தொடர்பு இருப்பதாக அமலாக்கத்துறை கூறி உள்ளது.

ராபர்ட் வதேரா இதற்கு முன்பும் பல்வேறு வழக்குகளில் அமலாக்கத்துறையால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு உள்ளார். அதில் தன் மீது சுமத்தப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளையும் அவர் மறுத்து உள்ளார்.

ஆனால் இந்த வழக்கில் அவரது பெயர் இடம்பெறுவது இதுவே முதல் முறை. அமலாக்கத்துறை மத்திய அரசின் உத்தரவின் பேரில் எதிர்க்கட்சி தலைவர்களுக்கு எதிராக செயல்படுவதாக அடிக்கடி குற்றம் சாட்டப்பட்டு வரும் நிலையில் பிரியங்கா காந்தி மீதான குற்றப் பத்திரிகை தேசிய அரசியல் புயலை கிளப்பி இருக்கிறது. அமலாக்கத்துறையின் இந்த நடவடிக்கை தொடர்பாக பிரியங்கா காந்தி இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை.

Views: - 286

0

0