பிப்.1 முதல் புறநகர் ரயில்களில் பொதுமக்கள் பயணிக்கலாம்: மகாராஷ்டிரா அரசு அறிவிப்பு..!!

29 January 2021, 3:58 pm
mumbai local train - updatenews360
Quick Share

மகாராஷ்டிரா: மும்பையில் புறநகர் ரயிலில் பொதுமக்கள் வரும் பிப்ரவரி 1ம் தேதி முதல் பயணிக்கலாம் என்று மாநில அரசு அறிவித்துள்ளது.

மும்பையில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா பிரச்சினை காரணமாக மின்சார ரயில் சேவை நிறுத்தப்பட்டது. கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து கடந்த ஜூன் மாதம் முதல் மும்பையில் மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. ஆனால் அதில் பொதுமக்கள் பயணம் செய்ய இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை.

தற்போது மின்சார ரயில்களில் பெண்கள், அரசு ஊழியர்கள், வங்கி ஊழியர்கள் உள்ளிட்டவர்கள் மட்டுமே பயணம் செய்து வருகின்றனர். பொதுமக்களை மின்சார ரயில்களில் பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் மின்சார ரயில்களில் பொதுமக்களை அனுமதித்தால் கொரோனா பரவல் வேகம் அதிகரித்து விடும் என மாநில அரசு அதனை மறுத்து வந்தது.

இந்நிலையில் மின்சார ரயில்களில் பயணம் செய்ய பொதுமக்களை அனுமதிப்பது குறித்து முதலமைச்சர் உத்தவ் தாக்கரே கடந்த சில தினங்களுக்கு முன்பாக ஆலோசனை நடத்தினார். இதனால், மின்சார ரயில்களில் விரைவில் பொதுமக்கள் பயணிக்க அனுமதி அளிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த சூழலில், வரும் பிப்ரவரி 1ம் தேதி முதல் மும்பை புறநகர் ரயில்களில் பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என முதலமைச்சர் உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளார்.

குறிப்பிட்ட நேரம் மட்டுமே பொதுமக்கள் பயணிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதிகாலை முதல் காலை 7 மணி வரையிலும், நண்பகல் முதல் பிற்பகல் 4 மணி வரையிலும், இரவு 9 மணி முதல் கடைசி ரயில் சேவை வரையிலும் என குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே பொதுமக்கள் பயணிக்க அனுமதி உண்டு எனவும் ஏனைய நேரங்களில் அத்தியாவசிய பணியாளர்களுக்கு மட்டுமே புற நகர் ரெயில்களில் பயணிக்க அனுமதி அளிக்கப்படும் என்று மராட்டிய முதலமைச்சர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Views: - 0

0

0