1.13 லட்ச விவசாயிகளின் கடன்கள் ரத்து..! தமிழகத்தை பின்பற்றி பஞ்சாப் அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு..!

8 March 2021, 8:19 pm
Punjab_Farmers_UpdateNews360
Quick Share

1.13 லட்சம் விவசாயிகளுக்கு பலன் தரும் வகையில், 1,186 கோடி ரூபாய் மதிப்புள்ள விவசாயக் கடன்களையும், 2021-22 ஆம் ஆண்டில் நிலமற்ற விவசாயிகளுக்கு 526 கோடி ரூபாயையும் தள்ளுபடி செய்வதாக பஞ்சாப் அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை மாநில நிதியமைச்சர் மன்பிரீத் சிங் பாதல் சட்டமன்றத்தில் வெளியிட்டார்.

மன்பிரீத் சிங் பாதல் 2021-22 நிதியாண்டிற்கான 1,68,015 கோடி ரூபாய் மதிப்புள்ள பட்ஜெட்டை மாநில சட்டசபையில் இன்று தாக்கல் செய்தார். இது அமரீந்தர் சிங் தலைமையிலான அரசாங்கத்தின் கடைசி பட்ஜெட் என்பது குறிப்பிடத்தக்கது. சட்டமன்றத் தேர்தல் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற உள்ளது.

கடைசி பட்ஜெட் என்பதால் அமரீந்தர் சிங் அரசு, பட்ஜெட்டில் அனைவருக்கும் தாராளம் காட்டியுள்ளது. 

முதியோர் ஓய்வூதியத்தை மாதத்திற்கு தற்போது உள்ள ரூ 750 முதல் ரூ 1,500 வரை உயர்த்துவதாக நிதி அமைச்சர் பட்ஜெட்டில் அறிவித்தார். மேலும் ஷாகுன் திட்டத்தின் கீழ் இந்த தொகையை ஆண்டுக்கு ரூ 21,000 முதல் ரூ 51,000 வரை உயர்த்துவதாகவும் அறிவித்தார்.

சுதந்திர போராட்ட வீரர்களுக்கான மாத ஓய்வூதியத்தை ஏப்ரல் 1 முதல் ரூ 7,500’லிருந்து ரூ 9,400’ஆக உயர்த்தவும் பஞ்சாப் அரசு முன்மொழிந்துள்ளது.

டெல்லி எல்லையில் போராடி வரும் விவசாயிகளில் பலர் பஞ்சாபைச் சேர்ந்தவர்கள் எனும் நிலையில், பஞ்சாப் விவசாயிகளின் கடன்களை அமரீந்தர் சிங் அரசு தள்ளுபடி செய்துள்ளது வரக்கூடிய சட்டமன்றத் தேர்தலில் நிச்சயம் பலனளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Views: - 6

0

0