சத்தமில்லாமல் சாதித்த சித்து… கூண்டோடு கலைந்த பஞ்சாப் காங்., அரசு : அதிர்ச்சியில் சோனியா, ராகுல்!!!

Author: Babu Lakshmanan
18 September 2021, 5:14 pm
punjab congress - updatenews360
Quick Share

உட்கட்சியான காங்கிரஸில் நிலவி வந்த பல்வேறு சலசலப்புகளுக்கு மத்தியில், பஞ்சாப் முதலமைச்சராக உள்ள அம்ரீந்தர் சிங் இன்று தனது பதவியை ராஜினாமா செய்தார்.

பஞ்சாப் மாநிலத்தில் புதிய முதலமைச்சரை நியமித்து பேரவை தேர்தலை சந்திக்க காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அதிருப்தியில் உள்ள பஞ்சாப் முதலமைச்சர் அம்ரீந்தர் சிங் தனது பதவியை ராஜினாமா செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பஞ்சாப்பில் மாநில காங்கிரஸ் தலைவராக சித்துவை நியமிக்க அம்ரீந்தர் சிங் ஏற்கனவே எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இந்த நிலையில் மாநில முதலமைச்சரை மீறி சித்து நியமனம் செய்யப்பட்டார். இதனால், அம்ரீந்தர் சிங் கடும் கோபத்திலேயே இருந்து வந்தார். பாஜகவில் இருந்து காங்கிரஸ் கட்சிக்கு வந்தவருக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பது ஏன்..? என்று காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா மற்றும் ராகுல் காந்தியுடன் வார்த்தை போர் கூட நடத்தியுள்ளார்.

Image

வேளாண் சட்டங்களை காரணம் காட்டி உள்ளாட்சி தேர்தலில் வரலாறு காணாத வெற்றியை காங்கிரஸ் பதிவு செய்தது. இப்படியிருக்கையில், இன்னும் 4 மாதத்தில் நடக்கவிருக்கும் சட்டசபை தேர்தலிலும் வெற்றி பெற்று விடலாம் என்பது காங்கிரஸ் தலைவர் சோனியாவின் மனக்கணக்கு. ஆனால், முதலமைச்சர் அம்ரீந்தர் சிங்கிற்கும், சித்துவிற்கும் இடையேயான கோஷ்டி பூசலால் அனைத்து கெட்டு விடுமோ..? என்ற அச்சம் அவருக்கு எழுந்தது.

எனவே, பஞ்சாப் தேர்தல் பொறுப்பாளர் அஜய் மக்கனை அனுப்பி, முதலமைச்சர் அம்ரீந்தர் சிங்குடன் சமரசம் செய்யப்பட்டது. இருப்பினும், முதலமைச்சர் பதவியில் இருந்து அம்ரீந்தர் சிங்கை நீக்க வேண்டும் என்று சொந்த கட்சி எம்எல்ஏக்களே போர்க்கொடி தூக்கினர். அதாவது, மொத்தம் உள்ள 80 எம்எல்ஏக்களில் 50 பேர் அம்ரீந்தருக்கு எதிராக இருப்பதாக சொல்லப்படுகிறது. இதைத் தொடர்ந்து, அஜய் மக்கன் ஒரு பக்கம் கட்சி ஆலோசனை கூட்டம் நடத்தி வந்த நிலையில், தனது ஆதரவாளர்களுடன் அம்ரீந்தர் சிங்கும் ஆலோசனை நடத்தினார்.

இந்த நிலையில், முதலமைச்சர் அம்ரீந்தர் சிங் ஆளுநர் பன்வாரிலாலை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்தார். அவருடன் அமைச்சரவையும் ராஜினாமா செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இன்று நடைபெறும் கூட்டத்தில் புதிய முதல்வர் தேர்ந்தெடுக்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. அடுத்த முதல்வராக சுனில் ஜக்கார், பிரதாப் சிங் பஜ்வா, ரவ்நீத் சிங் பிட்டு ஆகியோரில் ஒருவர் தேர்வு செய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. அம்ரீந்தர் சிங்கின் இந்த முடிவு சித்துவுக்கு காங்கிரஸில் கிடைத்த வெற்றியாகவே பார்க்கப்படுகிறது.

Views: - 201

0

0