அரசு பள்ளி மாணவர்களுக்கு ஸ்மார்ட் போன்..! திட்டத்தை தொடங்கி வைத்தார் பஞ்சாப் முதல்வர்..!

12 August 2020, 7:03 pm
Smart_Phone_Punjab_UpdateNews360
Quick Share

பஞ்சாபில் காங்கிரஸ் தலைமையிலான அரசு இன்று மாநிலத்தில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஸ்மார்ட்போன் திட்டத்தை வெளியிட்டது. அரசு பள்ளிகளில் பயிலும் 12’ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச ஸ்மார்ட்போன்களை விநியோகித்தது. மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டுகளுக்கு பிறகு இந்த திட்டம் நடைமுறைக்கு வருகிறது.

மாநில இளைஞர்களுக்கு இலவச ஸ்மார்ட்போன்கள் வழங்குவது 2017 சட்டமன்றத் தேர்தலின் போது காங்கிரஸின் முக்கிய தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றாகும். முதல்வர் அமரீந்தர் சிங் வீடியோ கான்பரன்சிங் மூலம் மாணவர்களுக்கு சுமார் போன் வழங்கும் பஞ்சாப் ஸ்மார்ட் இணைப்பு திட்டத்தை தொடங்கினார்.

12 வகுப்பில் பயிலும் ஆறு மாணவர்களுக்கு ஸ்மார்ட்போன்களை தானே நேரடியாக வழங்கி முதல்வர் திட்டத்தை தொடங்கி வைத்தார். அதே நேரத்தில் மாநிலம் முழுவதும் 26 இடங்களில் பல்வேறு அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் தொலைபேசிகளை மாணவர்களுக்கு விநியோகித்தனர்.

இத்திட்டத்தின் துவக்கத்தைக் குறிக்கும் வகையில் ஒவ்வொரு அமைச்சரும் தனிப்பட்ட முறையில் 20 தொலைபேசிகளை பல்வேறு மாவட்டங்களில் உள்ள மாணவர்களுக்கு வழங்கினர்.

இந்த ஆண்டு முதல் நவம்பர் மாதத்தில் அரசுப் பள்ளிகளில் 12’ஆம் வகுப்பு பயிலும் 1,74,015 மாணவர்கள் இந்த திட்டத்தால் பயன்பெறுவர் என அரசு தெரிவித்துள்ளது. இத்திட்டத்தின் பயனாளிகளின் 1.11 லட்சம் மாணவர்கள் கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

திட்டத்தைத் தொடங்கி வைத்து பேசிய முதல்வர், தேர்தல் அறிக்கையில் பட்டியலிடப்பட்டுள்ள வாக்குறுதிகளை மக்கள் நம்புகிறார்கள். எனவே அவை ஒவ்வொன்றையும் செயல்படுத்துவதை உறுதி செய்வது தன்னுடைய கடமையாகும் எனத் தெரிவித்தார்.

இத்திட்டத்தின் கீழ் விநியோகிக்கப்படும் ஸ்மார்ட்போன் ஒரு நல்ல செயல்பாட்டு தொலைபேசியாகும். இது மாணவர்களின் கல்விக்கு ஒரு முக்கிய கருவியாக மாறும் என்றும் முதல்வர் கூறினார்.

முன்னதாக இந்த நிகழ்வில் பேசிய கல்வி அமைச்சர் விஜய் இந்தர் சிங்லா, இந்த ஸ்மார்ட்போன்களை வாங்குவதற்கு ரூ 92 கோடி செலவிடப்படுவதாக தெரிவித்தார்.

இதற்கிடையே ஸ்மார்ட் போன், இன்டர்நெட் ஆகியவற்றால் இளைய சமுதாயம் பாழடைந்து வருவதாக ஒரு பக்கம் குற்றச்சாட்டு உள்ள நிலையில், பஞ்சாப் காங்கிரஸ் அரசின் இந்த திட்டம் அடுத்த தலைமுறை வாக்காளர்களை உருவாக்க மட்டுமே பயன்படும் என்றும் மாணவர்களின் எதிர்கால நலனுக்கு எந்த பலனும் இருக்காது என ஒருபக்கம் விமர்சனத்திற்கும் உள்ளாகியுள்ளது.

Views: - 10

0

0