பஞ்சாப்பில் பிரதமர் பாதுகாப்பில் குளறுபடியான விவகாரம் : உயர்மட்ட குழு விசாரணை? உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை!!

Author: Udayachandran RadhaKrishnan
10 January 2022, 9:34 am
Punjab Modi - Updatenews360
Quick Share

இந்த ஆண்டில் உத்தரபிரதேசம், உத்தரகண்ட், கோவா, மணிப்பூர் மாநிலங்களோடு, பஞ்சாப் மாநில சட்டப்பேரவைக்கும் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதையொட்டி, கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக, பஞ்சாப் மாநிலம் பெரோஸ்பூரில் பாஜக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில், பங்கேற்பதற்காக, பிரதமர் மோடி அங்கு வருகை புரிந்திருந்தார்.

ஆனால், சில, பல காரணங்களுக்காக பிரதமர் மோடியின் வருகை ரத்து செய்யப்பட்டதாக மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா மேடையிலேயே அறிவித்தார். இதனால், அங்கிருந்த பாஜக தொண்டர்கள் ஏமாற்றம் அடைந்தனர். பிரதமர் மோடியின் வருகை திடீரென ரத்து செய்யப்பட்டதற்கான காரணம் என்ன..? என்று எல்லோரும் குழம்பி போகினர்.

இந்த சூழலில், பிரதமர் மோடியின் பயணம் பாதியில் ரத்து செய்யப்பட்டது குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளது.வழியில் உள்ள ஒரு மேம்பாலத்தில் விவசாயிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டிருந்ததால் பிரதமர் கார் நிறுத்தப்பட்டது. வாகன அணிவகுப்பும் தொடர முடியவில்லை. 20 நிமிடங்கள் காத்திருந்தும் நிலையில் மாற்றம் இல்லை. இதனால் பிரதமர் மோடி அங்கிருந்து திரும்பினார். அவரது நிகழ்ச்சிகளும் ரத்தாகின. இந்த விவகாரம் பெரும் சர்ச்சையாகி சூடுபிடித்து வருகிறது.

இதற்கிடையில், பிரதமர் பயண வழித்தடத்தில் ஏற்பட்ட தீவிரமான பாதுகாப்பு குளறுபடி தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி என்.வி.ரமணா அமர்வில் மூத்த வக்கீல் மணிந்தர் சிங் முறையிட்டார். இந்த விவகாரம் தொடர்பாக கடந்த 7ஆம் தேதி விசாரணை மேற்கொண்ட தலைமை நீதிபதி என்வி ரமணா, நீதிபதிகள் சூரியகாந்த், ஹிமா கோலி ஆகியோர் அடங்கிய அமர்வு பிரதமர் பயணத்தில் ஏற்பட்ட பாதுகாப்பு குளறுபடிகள் தொடர்பான ஆவணங்கள் பத்திரப்படுத்த பஞ்சாப்-ஹரியானா உயர்நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தது.

இந்தநிலையில் இந்த வழக்கு தொடர்பாக இன்று உச்சநீதிமன்றத்தில் மீண்டும் விசாரணை நடைபெற உள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக உயர்மட்ட குழு அமைத்து விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Views: - 270

0

0