பள்ளியில் பாம்பு கடித்து சிறுமி உயிரிழந்த விவகாரம்..! பெற்றோரை சந்தித்து ஆறுதல் கூறிய ராகுல்…!

6 December 2019, 4:04 pm
RAhul - updatenews360
Quick Share

கேரளா : வயநாடு அருகே அரசுப்பள்ளியின் வகுப்பறையில் பாம்பு கடித்து உயிரிழந்த சிறுமியின் பெற்றோரை நேரில் சந்தித்து வயநாடு எம்.பி.ராகுல் காந்தி ஆறுதல் கூறினார்.

கேரளா மாநிலம், வயநாடு மாவட்டம், சுல்தான் பத்தேரி அரசுப்பள்ளியின் வகுப்பறையில் கடந்த 20-ஆம் தேதி பாம்பு கடித்ததால் 5-ஆம் வகுப்பு பயின்ற 10 வயது சிறுமி ஷெஹலா உயிரிழந்தார்.

இந்த சம்பவத்தையடுத்து, பள்ளி மாணவா்களும் பெற்றோர்களும் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து கேரள மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளில் பாம்பு உள்ளதா என்றும் பள்ளி வளாகத்தில் உள்ள புதர்களை அகற்றும் பணியில் அரசு கவனம் செலுத்தியது.

அதே போல மாநிலம் முழுவதும் அந்தந்த பஞ்சாயத்து எல்லைக்குள்பட்ட பகுதிகளில் உள்ள பள்ளிகளில் நிலுவையிலுள்ள சீரமைப்புப் பணிகளை விரைந்து முடிக்க கேரள அரசு உத்தரவிட்டது.

இந்நிலையில் கேரளா சென்றுள்ள வயநாடு தொகுதி எம்பி ராகுல் காந்தி வகுப்பறையில் பாம்பு கடித்து உயிரிழந்த சிறுமியின் பெற்றோரை நேரில் சென்று சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். சிறுமியின் பெற்றோரிடம் வெகு நேரம் பேசிய பின் அங்கிருந்து புறப்பட்டார்.