ராகுல் காந்தி ஹத்ராஸ் வருகை அரசியலுக்காகவே தவிர நீதிக்காக அல்ல : ஸ்மிருதி இரானி தாக்கு

3 October 2020, 4:24 pm
smiruthi irani - updatenews360
Quick Share

ராகுல் காந்தி ஹத்ராஸ் வருவது அரசியலுக்காகவே தவிர, நீதிக்காக இல்லை என்று மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி கூறியுள்ளார்.

உத்தரபிரதேசத்தின் ஹத்ராஸ் மாவட்டத்தை சேர்ந்த 19 வயதான இளம்பெண் ஒருவர், சமீபத்தில் 4 பேர் கொண்ட கும்பலால் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டதாகவும், அவரது உடலை போலீசார் அவசர அவசரமாக தகனம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்த பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை சம்பவம் உத்தரபிரதேசம் மட்டுமின்றி, நாடு முழுவதும் மிகப்பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தி உள்ளது. பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் சமூக அமைப்புகள் நடத்தி வரும் போராட்டத்தால் உத்தரபிரதேசத்தில் தொடர்ந்து பதற்றமும், பரபரப்பும் நிலவி வருகிறது.

பாதிக்கப்பட்ட குடும்ப உறுப்பினர்களை சந்திக்க சென்ற காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் அவரது சகோதரி பிரியங்கா காந்தி வதேரா ஆகியோரும் தடுத்து நிறுத்தப்பட்டதால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. தற்போது பாதிக்கப்பட்ட பெண்ணின் கிராமம் போலீசாரால் சீல் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி, காங்கிரசின் தந்திரங்களை மக்கள் அறிந்திருக்கிறார்கள், அதனால்தான் 2019 தேர்தலில் மக்கள் பாஜகவுக்கு வரலாற்று வெற்றியை உறுதி செய்துள்ளனர் என தெரிவித்துள்ளார். மேலும் ஹத்ராஸுக்கு அவர்கள் வருகை தமது அரசியலுக்காகவே தவிர பாதிக்கப்பட்டவரின் நீதிக்காக அல்ல என்பதை மக்கள் புரிந்துகொள்கிறார்கள் என தெரிவித்துள்ளார்.

ஸ்மிருதி இரானியின் கருத்துக்களால் அதிருப்தி அடைந்த சில காங்கிரஸ் தொழிலாளர்கள் வாரணாசியில் அவரது காரை நிறுத்த முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

Views: - 27

0

0