மீண்டும் கைகோர்த்த அசோக் கெலாட் – சச்சின் பைலட் : நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி..!
14 August 2020, 5:01 pmஜெய்ப்பூர் : பெரும் பரபரப்பிற்கு நடுவே ராஜஸ்தான் சட்டசபையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் அசோக் கெலாட் தலைமையிலான அரசு வெற்றி பெற்றது.
ராஜஸ்தானில் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. துணை முதலமைச்சராக சச்சின் பைலட் இருந்து வந்தார். இவர் திடீரென தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன் முதலமைச்சர் அசோக் கெலாட்டிற்கு எதிராக போர்க்கொடி தூக்கினார். இதனால், சச்சின் பைலட்டை துணை முதலமைச்சர் பதவியில் இருந்து தூக்கிய காங்கிரஸ் மேலிடம், அவரிடம் இருந்த கட்சி பதவிகளையும் பறித்தது.
இருப்பினும், சச்சின் பைலட் தனது ஆதரவு எம்.எல்.ஏ-க்களுடன் கெலாட்டின் அரசை எதிர்த்து வந்தார். இதையடுத்து, சட்டசபையை கூட்டுமாறு ஆளுநருக்கு அடுத்தடுத்து கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை ஏற்றுக் கொண்டு 14ம் தேதி சட்டசபை கூட்டத்தை கூட்ட ஒப்புதல் அளித்த ஆளுநர், பெரும்பான்மையை நிரூபிக்க கெலாட் அரசுக்கு உத்தரவிட்டிருந்தார்.
இதனிடையே, அதிருப்தி எம்.எல்.ஏ.வான சச்சின் பைலட், டெல்லியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து பேசினர். இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து, அவர் மீண்டும் கட்சியில் இணைந்து பணியாற்ற விருப்பம் தெரிவித்தார். இதையடுத்து, மனேசரில் தங்கியிருந்த சச்சின் பைலட் உள்பட 19 எம்எல்ஏக்கள் ஜெய்ப்பூருக்கு திரும்பினர்.
இந்த நிலையில், ராஜஸ்தான் சட்டசபையில் இன்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் அசோக் கெலாட் அரசு மீதான அரசு வெற்றி பெற்றது. குரல் வாக்கெடுப்பில் சச்சின் பைலட் உள்ளிட்ட அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் வாக்களித்ததன் மூலம் அசோக் கெலாட் அரசு வெற்றி பெற்றதாக சபாநாயகர் அறிவித்தார்.