“ராமர் கோவிலுக்கு மூல காரணம் ராஜீவ் காந்தியே”..! உரிமை கொண்டாடும் கமல்நாத்..! இந்துத்துவ அரசியலைக் கையிலெடுக்கும் காங்கிரஸ்..!

6 August 2020, 10:42 am
Kamalnath_Ram_Darbar_UpdateNews360
Quick Share

1985″ஆம் ஆண்டில் அயோத்தியில் அப்போதைய பாபர் மசூதியின் பூட்டுகளைத் திறந்த முதல் நபர் ராஜீவ் காந்தி என்றும், ராமர் கோவிலுக்கு யாரும் உரிமை கொண்டாடக்  கூடாது என்றும் மத்திய பிரதேச முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான கமல்நாத் தெரிவித்தார்.

ராமர் கோவிலின் பூமி பூஜை தினத்தையொட்டி ஊடகங்களுடன் பேசிய கமல்நாத், “இது ஒரு வரலாற்று நாள். ராமர் கோவிலின் கட்டுமானம் தற்போது தொடங்கியுள்ளது. இது ஒவ்வொரு இந்தியரும் நீண்ட காலமாக விரும்பியதாக இருந்தது” என்றார்.

1985’ஆம் ஆண்டில், அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி ராம்ஜன்ம பூமியின் கதவுகளைத் திறந்துவிட்டார் என்று காங்கிரஸ் தலைவர் கூறினார். “ராமர் கோவில் அயோத்தியில் கட்டப்பட வேண்டும் என்றும் அவர் கூறியிருந்தார். மேலும் அந்தக் காலத்திலிருந்தே ராமர் கோவில் கட்டப்படுவதற்கு ஒரு உணர்வு தோன்றியது. அதற்கு யாராவது தற்போது யாராவது சொந்தம் கொண்டாட முயற்சித்தால் அது தவறு” என்று அவர் மேலும் கூறினார்.

பிரதமர் மோடி அயோத்தியில் கோயிலுக்கு அடிக்கல் நாட்டியபோது, மாநில முதலமைச்சர்களைத் தவிர,  சமூகத்தின் அனைத்து பிரிவினரும், அனைத்து சாதியினரும், அனைத்து மதத்தினரும் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று கமல்நாத் கருத்து தெரிவித்தார்.

“நாடு ஒரு தொற்றுநோயால் சிக்கலில் உள்ளதை நான் அறிவேன். ஆனால் இன்னும் 100-150 பேர் அழைக்கப்பட்டிருக்கலாம். அது நடந்திருந்தால், முழு இந்தியாவும் ஒற்றுமையாக நிற்பதை உலகம் முழுவதும் பார்த்திருக்கும்.” என்று அவர் கூறினார்.

தான் சிந்த்வாராவில் மிகப்பெரிய ஹனுமான் கோவிலைக் கட்டியதாகக் கூறிய கமல்நாத், காங்கிரஸ் மத அரசியலைச் செய்யவில்லை, ஆனால் பாரதிய ஜனதா (பிஜேபி) செய்கிறது என்று வலியுறுத்தினார்.

முன்னதாக, கமல்நாத் அயோத்தியில் உள்ள ராமர் கோவிலின் பூமி பூஜை நிகழ்ச்சியை ஒட்டி, போபாலில் உள்ள அவரது இல்லத்தில் ஒரு ராம் தர்பார் நடத்த ஏற்பாடு செய்தார்.

இந்நிலையில், இத்தனை காலம் ராமர் கோவில் விவகாரத்தில் அமைதி காத்து வந்த காங்கிரஸ், தற்போது பிரியங்கா காந்தி, கமல்நாத் உள்ளிட்ட தலைவர்கள் மூலம், இந்தியாவின் அடையாளமான இந்துத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட அரசியலை முன்னெடுக்கிறதா எனும் சந்தேகம் மக்களிடையே எழுந்துள்ளது.

Views: - 7

0

0