உள்ளிருப்பு போராட்டம் நடத்தும் எம்பிக்கள்..! தேநீர் கொண்டு வந்து அசத்திய ராஜ்ய சபா துணைத் தலைவர்..!

22 September 2020, 10:13 am
Rajya_Sabha_MP_Protest_Updatenews360
Quick Share

நாடாளுமன்ற வளாகத்தில் இடைநீக்கம் செய்யப்பட்ட எட்டு எம்.பி.க்களின் உள்ளிருப்பு போராட்டம் இன்று இரண்டாவது நாளாக தொடர்கிறது. மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் சிங் காலையில் அவர்களுக்கு தேநீர் வழங்கினார். 

எம்பிக்கள் இடைநீக்க அறிவிப்பு வெளிவந்ததிலிருந்து ஹரிவன்ஷ் சிங் எதிர்கட்சிகளால் தொடர்ந்து கார்னர் செய்யப்பட்டு வருகிறார். ஞாயிற்றுக்கிழமை விவசாய மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டபோது துணைத் தலைவருடனான தவறான நடத்தை தொடர்பாக தற்போதைய அமர்வின் மீதமுள்ள நாட்களில் பங்கேற்க எட்டு எம்.பி.க்களுக்கு தடை விதிக்கப்பட்டது.

பீகாரைச் சேர்ந்த எம்.பி.யான துணைத் தலைவர் ஹரிவன்ஷ் ஞாயிற்றுக்கிழமை எதிர்க்கட்சி எம்.பி.க்களால் உடல் ரீதியாக அச்சுறுத்தப்பட்டதாக மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்தார்.

துணைத் தலைவருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கான நோட்டீஸையும் வெங்கையா நாயுடு நிராகரித்தார். ஏனெனில் அது சரியான வடிவத்தில் இல்லை. மேலும் 14 நாள் அறிவிப்பு காலம் வழங்கப்படவில்லை.

மாநிலங்களவை எம்.பி.க்களை இடைநீக்கம் செய்வது தொடர்பாக எதிர்க்கட்சிகள் அரசாங்கத்தை எதிர்த்தன. காங்கிரஸ் அதை ஜனநாயக விரோதமானது மற்றும் ஒருதலைப்பட்சம் என்று கூறியது.  

இடைநீக்கம் செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்ற வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தியின் சிலைக்கு அருகிலுள்ள புல்வெளிகளில் இரவுப் பொழுதை கழித்தனர். ஆம் ஆத்மி கட்சியின் சஞ்சய் சிங் காலையில் ஆர்ப்பாட்ட இடத்திலிருந்து ட்விட்டரில் ஒரு படத்தை வெளியிட்டு, “பாபுவின் சிலைக்கு முன்னால் திறந்த வானத்தின் கீழ் இரவு முழுவதும் கழிந்தது” என்று கூறியுள்ளார்.

இந்நிலையில் ராஜ்யசபா துணைத் தலைவர் இன்று காலை எம்பிக்களுக்காக தேநீர் மற்றும் சிற்றுண்டி கொண்டு வந்து ஆச்சரியப்படுத்தினார்.

ஆனால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட எம்.பி.க்கள் துணைத் தலைவர் வழங்கிய தேநீர் மற்றும் சிற்றுண்டிகளை ஏற்கவில்லை.

இதற்கிடையே பாராளுமன்ற வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வரும் இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.பி.க்கள் தங்கள் எதிர்ப்பைத் தொடர உறுதி அளித்துள்ளனர். மேலும் அவர்கள் அமர்வில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட வேண்டும் என்று அவர்கள் கோரக்கூடும்.

இடைநீக்கம் செய்யப்பட்ட எட்டு மேல் சபை உறுப்பினர்களில் நான்கு பேர் இன்று அறிவிக்கப்பட்ட மாநிலங்களவை விவாத பட்டியலில் இடம்பெறும் சில முக்கிய மசோதாக்களை எதிர்த்து தீர்மானங்களை முன்வைத்தனர்.

இதற்கிடையே அக்டோபர் 1 வரை திட்டமிடப்பட்டுள்ள மழைக்காலக் கூட்டத்தொடர், பாராளுமன்றத்தில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு காரணமாக விரைவில் முடிவுக்கு வரும் என கூறப்படுகிறது

Views: - 9

0

0