முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு..! கங்கைக் கரையில் ராம்விலாஸ் பஸ்வான் உடல் தகனம்..!

Author: Sekar
10 October 2020, 7:13 pm
ram-vilas_paswan_funeral_updatenews360
Quick Share

மறைந்த மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வானுக்கு இன்று பாட்னாவில் அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடைபெற்றது. லோக் ஜனசக்தி கட்சித் தலைவரும் அவரது மகனுமான சிராக் பஸ்வான் இந்து சடங்குகளின்படி பாட்னாவின் திகா காட்டில் இறுதி சடங்குகளைச் செய்தார். 

கங்கை நதிக்கரையில் முழு அரசு மரியாதைகளுடன் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. மூத்த தலைவரின் இறுதி சடங்கில் சட்டம் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் மத்திய அரசு மற்றும் அமைச்சரவை சார்பாக கலந்து கொண்டார்.

மறைந்த நாடாளுமன்ற உறுப்பினருக்கு பீகார் முதல்வர் நிதிஷ் குமார், துணை முதல்வர் சுஷில் மோடி, மத்திய அமைச்சர்கள் கிரிராஜ் சிங், நித்யானந்த் ராய் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். இறுதிச் சடங்கில் ஆர்ஜேடி தலைவர் தேஜஷ்வி யாதவும் கலந்து கொண்டார்.

74 வயதான மத்திய அமைச்சர் அக்டோபர் 8’ஆம் தேதி டெல்லியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில், இதய அறுவை சிகிச்சைக்கு பின்னர் இறந்தார். டெல்லி விமான நிலையத்திலிருந்து சிறப்பு விமானத்தில் அவரது உடல் பாட்னாவுக்கு கொண்டு செல்லப்பட்டது.

பீகார் முதலமைச்சர், துணை முதல்வர் மற்றும் ரவிசங்கர் பிரசாத் நேற்று மாலை பாட்னா விமான நிலையத்திற்கு அவரது உடல் கொண்டுவரப்பட்டபோது மலர் அஞ்சலி செலுத்தினர்.

இந்த நிகழ்வில் சிராக் பஸ்வான், அவரது தாயார் ரீனா பஸ்வான், மாமா பஷ்பதி பராஸ் மற்றும் பிற குடும்ப உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

ஆர்.ஜே.டி தலைவர் தேஜஷ்வி யாதவ், மாநில சட்டமன்ற சபாநாயகர் விஜய் குமார் சவுத்ரி மற்றும் பலர் அப்போது ராம்விலாஸ் பஸ்வானுக்கு மலர் அஞ்சலி செலுத்தினர்.

பின்னர், முன்னாள் மத்திய அமைச்சரின் உடல் மாநில சட்டசபை வளாகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு நிதிஷ் குமார் மற்றும் பிற அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் இறுதி மரியாதை செலுத்தினர்.

பின்னர் சட்டசபை வளாகத்திலிருந்து, பஸ்வானின் உடல் பாட்னாவில் உள்ள எல்.ஜே.பியின் மாநில தலைமையகத்திற்கு கொண்டு வரப்பட்டது. அங்கு கட்சி தொண்டர்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தினர்.

பாஜக பொதுச் செயலாளர் பூபேந்திர யாதவ், மாநிலக் கட்சித் தலைவர் சஞ்சய் ஜெய்ஸ்வால் மற்றும் விகாஷீல் இன்சான் கட்சித் தலைவர் முகேஷ் சாஹ்னி ஆகியோர் எல்ஜேபி அலுவலகத்திற்குச் சென்று மறைந்த தலைவருக்கு இறுதி மரியாதை செலுத்தினர்.

இதையடுத்து அவர் உடல் இந்து மத சடங்குகளின் படி, கங்கைக் கரையில் தகனம் செய்யப்பட்டது.

Views: - 45

0

0