தேர்தல் நேரத்தில் மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வானுக்கு இதய அறுவைச் சிகிச்சை..! தொண்டர்கள் கலக்கம்..!

Author: Sekar
4 October 2020, 1:43 pm
Ram_Vilas_Paswan_UpdateNews360
Quick Share

மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான் டெல்லி மருத்துவமனையில் இதய அறுவை சிகிச்சை செய்துள்ளார் என்று அவரது மகனும் லோக் ஜனசக்தி கட்சியின் (எல்ஜேபி) தேசியத் தலைவர் சிராக் பஸ்வான் ஒரு ட்வீட்டில் தெரிவித்துள்ளார்.

பஸ்வானின் அறுவை சிகிச்சை காரணமாக நேற்று மாலை நடைபெற்ற எல்ஜேபி நாடாளுமன்ற சபைக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

பீகார் சட்டமன்றத் தேர்தலுக்காக தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (என்.டி.ஏ) அங்கம் வகிக்கும் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பா.ஜ.கவுடன் எல்.ஜே.பி கடுமை காட்டி வரும் நிலையில் எல்.ஜே.பி தலைவர் ராம் விலாஸ் பஸ்வான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது தொண்டர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான் ஒரு மாதத்திற்கும் மேலாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சிராக் பஸ்வான் இது தொடர்பாக வெளியிட்ட ட்வீட்டில், “எனது தந்தை ராம் விலாஸ் பஸ்வான் கடந்த பல நாட்களாக டெல்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். நேற்று மாலை மருத்துவர்கள் என் தந்தைக்கு இதய அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருந்தது. தேவைப்பட்டால் சில வாரங்களுக்கு பிறகு மற்றொரு ஆபரேஷன் இருக்கலாம். இந்த நேரத்தில் என்னுடன் மற்றும் எனது குடும்பத்தினருடன் நின்ற அனைவருக்கும் நன்றி.” எனத் தெரிவித்துள்ளார்.

ராம் விலாஸ் பஸ்வான் ஏற்கனவே பைபாஸ் அறுவை சிகிச்சை செய்துள்ளார். அவரது உடல்நிலையை ஆய்வு செய்ய நேற்று சென்னையில் இருந்து ஒரு மருத்துவர் பறந்து சென்றதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பீகாரில் சட்டசபை தேர்தலுக்கான அரசியல் ஏற்கனவே தீவிரமடைந்துள்ளது. மேலும் தேசிய ஜனநாயக கூட்டணியின் தொகுதி ஒதுக்கீடு இன்னும் தெளிவாகவில்லை. மறுபுறம், சிராக் பஸ்வான் பீகார் தேர்தலுக்கான தனது கட்சியின் சுமூகமான தயாரிப்புகளை உறுதிப்படுத்த வேண்டும். அத்துடன் மருத்துவமனையில் தனது தந்தையிடம் கலந்தாலோசிக்க வேண்டும்.

பீகாரில் 243 சட்டமன்ற இடங்கள் உள்ளன. தேர்தல்கள் அக்டோபர் 28, நவம்பர் 3 மற்றும் 7 ஆகிய தேதிகளில் மூன்று கட்டங்களாக கொரோனா பாதுகாப்பு நெறிமுறைகளுடன் நடைபெறும். மேலும் வாக்கு எண்ணிக்கை நவம்பர் 10’ஆம் தேதி நடக்க உள்ளது.

இந்நிலையில் மிகக் குறைவான நாட்களே உள்ள நிலையில், தற்போதைய சூழ்நிலையில் ராம் விலாஸ் பாஸ்வான் நேரடியாக களத்திற்கு வர முடியாது என்பதால், லோக் ஜனசக்தி முழுமையாக சிராக் பஸ்வானையே முழுமையாக நம்பியுள்ள சூழ்நிலையில், அவரின் ஆதரவாளர்களோ கேட்ட தொகுதிகள் கிடைக்காமல் போனால், சிராக் பஸ்வானை முதல்வர் வேட்பாளராக அறிவித்து, களம் காண வலியுறுத்துவதால் லோக் ஜனசக்தியின் எதிர்காலம் கேள்விக்குறியாகவே உள்ளது.

Views: - 40

0

0