பாலிவுட் மாபியா குறித்து பேசியதால் கொலை மிரட்டல்..! மற்றொரு நடிகருக்கும் ஒய் பிளஸ் பாதுகாப்பு..!

1 October 2020, 12:53 pm
ravi_kishan_MP_UpdateNews360
Quick Share

பாஜக எம்.பி.யும் நடிகருமான ரவி கிஷனுக்கு பாலிவுட்டின் போதைப்பொருள் தொடர்புகள் குறித்து பேசிய பின்னர் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டதைத் தொடர்ந்து ஒய்-பிளஸ் வகை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அவர் வெளியிட்ட ஒரு ட்வீட்டில், நடிகர் ரவி கிஷன் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு நன்றி தெரிவித்தார்.

தனது குடும்பத்துக்கும், தனது தொகுதி மக்களுக்கும் பாதுகாப்பு வழங்கிய முதல்வருக்கு ரவி கிஷன் நன்றி தெரிவித்ததோடு, அவரது குரல் தொடர்ந்து மக்களின் எண்ணங்களை எதிரொலிக்கும் என்றும் கூறினார்.

“மரியாதைக்குரிய மகாராஜ் ஜி, எனது பாதுகாப்பை மனதில் கொண்டு, எனக்காக, எனது குடும்பத்தினருக்கும், எனது மக்களவைத் தொகுதியின் மக்களுக்கும் நீங்கள் செயல்படுத்திய ஒய் பிளஸ் வகை பாதுகாப்பிற்காக நாங்கள் உங்களுக்கு கடன்பட்டிருக்கிறோம். அதற்காக நாங்கள் உங்களுக்கு நன்றி தெரிவிக்கிறோம். எனது குரல் தொடர்ந்து எதிரொலிக்கும் சபையில் மக்களுக்காக எதிரொலிக்கும்” என்று அவர் ட்வீட் செய்தார்.

முன்னதாக பாலிவுட் நடிகை கங்கனா ரனவத்தும் இதே போல், பாலிவுட் மாபியா குறித்து பேசி, சிவசேனாவின் மிரட்டலை எதிர்கொண்டதால் ஒய் பிளஸ் வகை பாதுகாப்பு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பாலிவுட்டில் தீவிரமாக செயல்படும் போதைப்பொருள் கும்பலுக்கு எதிரான குரல் அதிகரித்து வரும் நிலையில், அமிதாப் பச்சனின் மனைவியும் எம்.பி.யுமான நடிகை ஜெயா பச்சன் உள்ளிட்ட பிரபலங்கள் பாலிவுட் மாபியா குறித்து பேசுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.