ஊனத்தால் நிராகரித்த தாய்..! வளர்ப்புப் பெற்றோராக மாறிய வனக்காவலர்கள்..! மங்களா எனும் புலிக்குட்டியின் கதை..!

4 February 2021, 8:29 pm
tiger_cub_mangala_updatenews360
Quick Share

அந்த பெண் புலிக் குட்டியின் வயது இரண்டு மாதம் தான் ஆகி இருந்தது. புலிக்குட்டியின் பின்னங்கால்கள் செயலிழந்ததால் தாய்ப்புலி குட்டியை நிராகரித்து விட்டது. இதனால் பசியுடன் மிகவும் பலவீனமாக புலிக்குட்டி இருந்த நிலையில், உதவி வந்தவுடன் பயந்த அதன் கண்கள் வேதனையை பிரதிபலித்தன.

கேரளாவில் உள்ள வனப்பகுதியில் வழக்கமான ரோந்துப் பணியில் இருந்த இரண்டு வன காவலர்கள், அந்த புலிக்குட்டியை அழைத்துச் சென்று மீண்டும் உயிர்ப்பித்தனர். மங்களா எனப் பெயரிடப்பட்ட ஊனமுற்ற புலி குட்டி, ஒரு கால்நடை மருத்துவர் மற்றும் இரண்டு வன ஊழியர்களின் கண்காணிப்புக் கண்களின் கீழ் மெதுவாக வாழ்க்கையின் படிப்பினைகளை தேக்கடியில் உள்ள பெரியார் தேசிய பூங்காவில் கற்றுக் கொண்டிருக்கிறது.

நவம்பர் 22’ஆம் தேதி, இடுக்கி மாவட்டத்தின் தேக்கடியில் மங்களதேவி கோவிலுக்கு அருகிலுள்ள மனித நடமாட்டம் இல்லாத வனப்பகுதியில் புலி குட்டி அழுதுகொண்டிருப்பதை வன ரோந்து குழு ஒன்று கண்டது. அதன் தாய் தன்னை நிராகரித்ததால் பசியுடனும் பலவீனமாகவும் இருந்தது. 

இந்நிலையில் உதவி வந்தபோது மங்களா மரணத்தை எதிர்நோக்கிக் கொண்டிருந்ததை உணர்ந்தனர். மேலும் வன ஊழியர்கள் பிடித்துச் சென்றதால் பலவீனத்துடன் பயமும் சேர்ந்து கொண்டது அதன் கண்களில் அப்பட்டமாகத் தெரிந்ததாக வனக் காவலர்கள் கூறினார். 

அவர்கள் சுற்றிலும் தேடிய நிலையில் அதன் தாய் எங்கும் இல்லை. குட்டியை அங்கேயே விட்டுவிட்டு வந்தால் இறந்துவிடும் என்பதை உணர்ந்த இருவரும், தேக்கடியில் உள்ள வன எல்லை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றனர். வனத்தைப் பொறுத்தவரை மிருகங்கள் ஊனமுற்ற குட்டிகளை விதியின் படி நடக்கட்டும் என விட்டுவிட்டு சென்று விடுவது வழக்கமான ஒன்று தான்.

இந்நிலையில் வனக்காவலர்களால் மீட்கப்பட்ட புலிக்குட்டியின் பின்னங்கால்கள் செயலிழந்துவிட்டதால் குட்டி உயிர் பிழைக்க வாய்ப்பில்லை என்று அவர்கள் உணர்ந்தார்கள். எனினும் பெரியார் கிழக்கு பிரிவு வன துணை இயக்குனர் சுனில் பாபு மங்களாவை உயிர் பிழைக்க ஒரு வாய்ப்பு அளிக்க அடியெடுத்து வைத்தார். 

இரண்டு வன காவலர்களின் உதவியுடன் குட்டியை வளர்க்க மூன்று கால்நடை மருத்துவர்களின் உதவியை நாடினார். சியாமா, சிபி, மற்றும் நிஷா ஆகிய மூன்று கால்நடை மருத்துவர்கள் குட்டிக்கு சிகிச்சையளிக்கத் தொடங்கினர்.

மங்களாவின் கால்களைப் புதுப்பிக்க பிசியோதெரபி சிகிச்சை அளித்தனர். அவர்கள் மங்களா என்று பெயரிட்டு, வலிமையைப் பெற புலிக்குட்டிக்கு உணவுப் பொருட்களைக் கொடுத்தார்கள். இரண்டு மாதங்களில், குட்டி 7.5 கிலோவாக வளர்ந்து, தனது பின்னங்கால்களில் வலிமையைப் பெற்றுள்ளது.

“நாங்கள் ஒரு அடர்ந்த வனப்பகுதியில் குட்டியை வைக்கவே விரும்புகிறோம். வனப்பகுதியில் சுயமாக வாழ்வதற்கு ஏற்ப அது தயாராக வேண்டும். நாங்கள் மங்களாவை மனிதர்களிடமிருந்து விலக்கி வைத்திருக்கிறோம். மருத்துவரும் இரண்டு காவலர்களும் மட்டுமே மங்காளவுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். ஒரு புலிக்குட்டியை மீட்டு சிகிச்சை அளித்து காட்டுக்குள் விடப்படுவது இந்தியாவில் இதுவே முதல் முறை.” என்று சுனில் பாபு கூறினார்.

இப்போது குட்டியுடன் நேரடி தொடர்பில் இருக்கும் கால்நடை மருத்துவர் டாக்டர் அனுராக் கூறுகையில், மங்களாவுக்கு காட்டில் ஒரு இடத்தை அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. ஒரு குளம், ஓய்வெடுக்க ஒரு தங்குமிடம், மற்றும் விலங்கு சுற்றிச் செல்ல போதுமான இடம் ஆகியவற்றுடன் மங்களா காட்டு வாழ்க்கைக்கு பழகும் என்றார்.

“மங்களாவின் கால்களைப் புத்துணர்ச்சியுறச் செய்வதற்காக நாங்கள் தினசரி உடற்பயிற்சி வழங்குகிறோம். நீச்சல் கற்க உதவும் வகையில் ஒரு சிறிய குளம் அமைக்கப்பட்டுள்ளது. மங்களாவுக்கு பார்வை மங்கலாகிவிட்டது மற்றும் அறுவை சிகிச்சை தேவைப்படுகிறது. ஒவ்வொரு இரண்டு நாட்களுக்கு ஒருமுறை மங்களாவின் எடை மற்றும் கண்பார்வையை சரிபார்க்கிறோம்.

மேலும் மங்களா விளையாட ஒரு புலி பொம்மை வழங்கப்பட்டுள்ளது. இப்போது மங்களாவுக்கு நான்கு மாதங்கள் ஆகின்றன. நாங்கள் மங்காளவுக்கு ஒரு நாளைக்கு இரண்டு முறை கோழி, மாட்டிறைச்சி மற்றும் புரதச் சத்துக்களை வழங்குகிறோம். ஃபைபர் டயட்டுக்காக நாங்கள் கேரட் கொடுக்கிறோம். ஆறு மாதங்கள் முடிந்ததும் மங்களாவை காட்டிற்கு மாற்ற வேண்டும்.” என அனுராக் மேலும் கூறினார்.

“வன விலங்குகள் ஊனமுற்ற குட்டிகள் உயிர்வாழ முடியாது என்பதால் அவற்றை நிராகரிப்பது பொதுவானது. ஆனால் மங்களா இப்போது வலிமையைப் பெற்றுள்ளதால் காட்டு வாழ்க்கைக்கு முழுமையாக தயாராக முடியும். காடுகளை புரிந்து கொள்ள மங்களாவுக்கு உதவ குறைந்தபட்ச மனித தலையீடு தேவைப்படுகிறது.

ஆனால் மனிதர்களுடன் நெருங்கி வந்தால், விடுதலையான பிறகு மங்களா மனித வாழ்விடங்களுக்கு அருகில் வாழ முயற்சி செய்யும். அது மோதலுக்கு வழிவகுக்கும். தேசிய புலிகள் அறக்கட்டளையின் வழிகாட்டுதல்களின்படி பயிற்சி அளிக்கப்படுகிறது.” என்று ரேஞ்ச் அதிகாரி அகில் பாபு கூறினார்.

பெரியார் சரணாலயத்தில் 100 ஹெக்டேர் பரப்பளவை அபிவிருத்தி செய்ய வனத்துறை திட்டமிட்டுள்ளது. அங்கு மீட்கப்பட்ட விலங்குகள் விடுவிக்கப்படும், மேலும் அந்த இடத்திலேயே வேட்டையாடுவதற்கான படிப்பினைகளை மங்களா முதலில் கற்றுக் கொள்ளும். மங்களா வளர்ந்து வலிமை பெற்றவுடன் ரேடியோ காலருடன் காட்டுக்குள் விடுவிக்கப்படும்.

Views: - 0

0

0