கொரோனாவால் பரோலில் அனுப்பப்பட்ட கைதிகளை மீண்டும் சிறையிலடைக்க உத்தரவு..! யோகி ஆதித்யநாத் அரசு அதிரடி..!

1 December 2020, 4:39 pm
Prison_UpdateNews360
Quick Share

தண்டனை பெற்ற கைதிகளின் பரோலை மேலும் நீட்டிக்கக்கூடாது என்று உத்தரபிரதேசத்தில் உள்ள யோகி ஆதித்யநாத் அரசு சிறைத்துறைக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

முன்னதாக இந்த ஆண்டு மே மாதம் கொரோனா காரணமாக, உச்சநீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் மாநில அரசு 2,256 குற்றவாளிகளை விடுவித்த நிலையில், அவர்கள் அனைவரையும் மீண்டும் சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக கொரோனா தொற்றுநோயைக் கருத்தில் கொண்டு சிறைகளில் கைதிகளின் எண்ணிக்கையை குறைப்பதற்கு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. ஏழு வருடங்களுக்கும் குறைவான தண்டனை அனுபவித்து வந்த குற்றவாளிகளில் நன்னடத்தை அடிப்படையில் இவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இந்த 2,256 கைதிகளில், நான்கு பேர் இறந்துவிட்டனர். 136 பேர் சிறைவாசம் நிறைவடைந்ததால் விடுவிக்கப்பட்டனர். மேலும் 56 பேர் மற்ற வழக்குகளில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 2,063 குற்றவாளிகள் மட்டுமே தற்போது பரோலில் உள்ளனர் என்று மாநில சிறைத்துறை தெரிவித்துள்ளது.

சிறைத்துறை டிஜிபி ஆனந்த்குமார் வெளியிட்ட ஒரு அறிவிப்பில், “நாங்கள் 693 குற்றவாளிகளை மீண்டும் சிறைகளில் அடைத்தோம். மற்றவர்கள் இன்னும் திரும்பி வர உள்ளனர். அவர்களுக்கான அறிவிப்பு அந்தந்த மாவட்ட சிறைச்சாலைகள் மற்றும் எஸ்.பி.க்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.” எனத் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், மாநில அரசின் உத்தரவைத் தொடர்ந்து ஏப்ரல் 29 ஆம் தேதி பிலிபிட் மாவட்ட சிறையில் இருந்து பரோலில் விடுவிக்கப்பட்ட 15 கைதிகளில் 8 பேர் காணாமல் போயுள்ளனர்.

காவல்துறை கண்காணிப்பாளர், சிறைச்சாலை கண்காணிப்பாளர் அனுப்பிய கடிதத்தைத் தொடர்ந்து, இந்த கைதிகளை கண்டுபிடித்து சிறை அதிகாரிகள் முன் சரணடையச் செய்ய அனைத்து காவல்நிலைய அதிகாரிகளுக்கும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Views: - 18

0

0