ஆற்றுக்கால் பகவதி அம்மன் பொங்கல் விழா: கொடியேற்றத்துடன் இன்று தொடக்கம்…பக்தர்களுக்கு கட்டுப்பாடு..!!

Author: Rajesh
9 February 2022, 9:02 am

திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் பொங்கல் விழா இன்று தொடங்குகிறது.

திருவனந்தபுரம் அருகில் ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் பெண்களின் சபரிமலை என்றும் அழைக்கப்படுகிறது. இங்கு நடைபெறும் பொங்கல் விழாவில் பல லட்சம் பெண்கள் கலந்து கொண்டு பொங்கல் வைத்ததால் கின்னஸ் சாதனை புத்தகத்தில் ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் இடம் பிடித்து உள்ளது.

இந்த கோவிலின் வருடாந்திர பொங்கல் விழா இன்று காலை 10.50 மணிக்கு அம்மனுக்கு காப்பு கட்டி குடியிருத்தல் சடங்குடன் தொடங்குகிறது. பிரசித்தி பெற்ற பொங்கல் வழிபாடு 17ம் தேதி நடைபெறுகிறது. கொரோனா கட்டுப்பாடுகள் அமலில் இருப்பதால், 200 பக்தர்களுக்கு மட்டுமே பொங்கலிட அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
மற்ற பக்தர்கள் அவரவர் வீட்டின் முற்றங்களில் பொங்கலிட தடையில்லை. அன்றைய தினம் காலை 10.50 மணிக்கு பொங்கல் வழிபாடு தொடங்கும். மதியம் 1.20 மணிக்கு பொங்கல் நிவேத்தியம் நடைபெறும். 11ம் தேதி காலை 8.30 மணிக்கு குத்தியோட்ட விரதம் தொடங்குகிறது.

விழாவையொட்டி, ஆண்டு தோறும் நடைபெறும் கலை நிகழ்ச்சிகளுக்கு இந்த ஆண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது. பக்தர்களின் கூட்டத்தை கட்டுப்படுத்தி நிகழ்ச்சிகள் எளிமையாக நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.

பொங்கல் விழாவையொட்டி வரும் பக்தர்களின் அடிப்படை வசதிகளை எந்த வித குறைபாடுகளும் இன்றி செய்து கொடுக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு உள்ளதாக கோவில் அறக்கட்டளை நிர்வாகிகள் தெரிவித்தனர்.

  • lokesh kanagaraj introduce as a hero in upcoming film லோகேஷ் கனகராஜ்ஜுக்கும் அந்த விபரீத ஆசை வந்திடுச்சா? விரைவில் எடுக்கப்போகும் புதிய அவதாரம்!