ஆர்யன் கானை விடுவிக்க ரூ.25 கோடி பேரம்….வான்கடே மீது புகார்: வாக்குமூலம் பதிந்த அதிகாரிகள்..!!

Author: Aarthi Sivakumar
28 October 2021, 9:18 am
Quick Share

மும்பை: பாலிவுட் நடிகர் ஷாருக் கானின் மகன் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் விசாரணை அதிகாரி சமீர் வான்கடே 25 கோடி ரூபாய் கேட்டு பேரம் பேசியதாகக் கூறப்பட்ட விவகாரத்தில் அதிகாரிகள் வாக்குமூலத்தை பதிவு செய்தனர்.

மும்பையில் சொகுசு கப்பல் ஒன்றில் நடந்த போதை விருந்தில் பங்கேற்றதாக குற்றஞ்சாட்டப்பட்டு, பாலிவுட் நடிகர் ஷாருக் கானின் மகன் ஆர்யன் கான் உட்பட 20 பேரை போதைப் பொருள் தடுப்பு பிரிவின் மும்பை மண்டல இயக்குனர் சமீர் வான்கடே தலைமையிலான அதிகாரிகள் சமீபத்தில் கைது செய்தனர்.

இந்த வழக்கில், தனியார் துப்பறியும் நிபுணரான கே.பி.கோசாவி, அவரது கார் டிரைவரும், மெய்க்காப்பாளருமான பிரபாகர் செய்ல் உட்பட எட்டு பேர் முக்கிய சாட்சிகளாக சேர்க்கப்பட்டனர்.

முதன்மை சாட்சியான பிரபாகர் செய்ல், போதைப் பொருள் தடுப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது, ஆர்யன் கான் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்ட பின் 10 வெற்று காகிதங்களில் போலீஸ் அதிகாரி சமீர் வான்கடே என்னிடம் கையெழுத்து வாங்கினார்.

ஷாருக்கின் மேலாளரை கோசாவி உட்பட இருவர் சந்தித்து பேசி வழக்கிலிருந்து ஆர்யன் கானை விடுவிக்க 25 கோடி ரூபாய் பேரம் பேசினர். இதில் 8 கோடி ரூபாயை வான்கடேவிடம் தர வேண்டும் என ஷாருக் மேலாளரிடம் கோசாவி தெரிவித்தார். இதற்கான ஆதாரங்கள் உள்ளன இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த புகார் குறித்து விசாரிக்க டெல்லியைச் சேர்ந்த போதைப் பொருள் தடுப்பு பிரிவின் துணை இயக்குனர் ஜெனரலும், லஞ்ச ஒழிப்புத் துறை தலைமை அதிகாரியுமான கியானேஸ்வர் சிங் தலைமையில் ஐந்து அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர்.

latest tamil news

அதிகாரிகள் ஐந்து பேரும் மும்பைக்கு நேற்று காலை வந்தனர். தெற்கு மும்பையில் உள்ள போதைப் பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்துக்கு சென்று, சில முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர்.

பின்னர், கியானேஸ்வர் சிங் கூறியதாவது, ஆர்யன் வழக்கில் சாட்சி கூறிய குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணையை துவக்கியுள்ளோம். இந்த புகார் தொடர்பாக வான்கடேவின் வாக்குமூலத்தையும் பதிவு செய்துள்ளோம். மற்ற சாட்சிகளின் வாக்குமூலத்தையும் பதிவு செய்வோம் இவ்வாறு அவர் கூறினார்.

Views: - 242

0

0