சட்டப்பேரவை தேர்தலில் சிறிய கட்சிகளுடன் கூட்டணி: அகிலேஷ் யாதவ் அறிவிப்பு

Author: Udhayakumar Raman
1 July 2021, 10:33 pm
akhilesh_yadav_updatenews360
Quick Share

உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் சமாஜவாதி கட்சி சிறிய கட்சிகளுடன் கூட்டணி வைத்து போட்டியிடும் என அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார்.

உத்தரபிரதேச மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. நாட்டிலேயே உத்தரபிரதேசத்தில்தான் அதிக அளவு சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. எனவே உத்தரபிரதேசத்தில் ஆட்சியை பிடிப்பதை அரசியல் கட்சிகள் முக்கியத்துவம் வாய்ந்த தாக கருதுகின்றன. ஆளும் பாஜக ஆட்சி ஒருபுறம் களத்தில் இருக்கிறது. ஆளும் கட்சிக்கு எதிராக சமாஜ்வாதி , பகுஜன் சமாஜ், காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சிகள் களத்தில் இருக்கின்றன.தேர்தலுக்கு ஒரு ஆண்டுக்கு மேல் இருக்கும் நிலையில் இப்போதே உத்தரபிரதேச கட்சிகள் தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தைகளை தொடங்கி விட்டன.

இந்த நிலையில் உபி மாநிலம் லக்னோவில் செய்தியாளர்களிடம் பேசிய சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கூறியதாவது:- “உத்தரபிரதேசத்தில் வேலைவாய்ப்பு இன்மை, விலை உயர்வு போன்ற பிரச்னைகள் நிலவுகின்றன. ஆனால், இது குறித்து ஆளும் பாஜக பேசத் தயாராக இல்லை. எனவே உத்தரபிரதேச மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர். மாற்றம் தரும் கட்சிக்குத் தான் மக்கள் ஓட்டுப்போடுவார்கள். சட்டப்பேரவை தேர்தலில் சிறிய கட்சிகளை ஒன்றிணைத்து கூட்டணி அமைத்து போட்டியிட திட்டமிட்டுள்ளோம். பாஜக கடந்த தேர்தலின் போது தேர்தல் அறிக்கையில் கூறிய வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. தேர்தல் அறிக்கையை அவர்கள் குப்பையில் வீசி விட்டார்கள்.

அண்மையில் நடைபெற்று முடிந்த பஞ்சாயத்துத் தேர்தலில் பாஜக தோல்வியை சந்தித்தது. ஆனால், ரிசல்ட்டை மாற்ற முயற்சி செய்தனர். ஆளும் கட்சிக்கு ஆதரவாக தேர்தல் முடிவை வெளியிட வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்களுக்கு பாஜக அரசு உத்தரவிட்டுள்ளது. பணத்தையும், அதிகாரத்தையும் பயன்படுத்தி தேர்தல் முடிவை மாற்றுகின்றனர்.”இவ்வாறு அகிலேஷ் யாதவ் கூறினார்.

Views: - 171

0

0