ஊழல் வழக்கில் கைதாகிறாரா துணை முதலமைச்சர்… அடுத்தடுத்து சிக்கும் அமைச்சர்கள்… ஆளும் அரசுக்கு எழுந்த சிக்கல்..!!

Author: Babu Lakshmanan
17 October 2022, 9:52 am
CBI_UpdateNews360
Quick Share

டெல்லி ; ஊழல் தொடர்பான வழக்கில் டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவை சிபிஐ அதிகாரிகள் இன்று கைது செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

டெல்லியில் முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம்ஆத்மி ஆட்சி நடக்கிறது. மதுபான கொள்முதல், வரி விதிப்பு உள்ளிட்ட விவகாரங்களில் முந்தைய கலால் கொள்கையில் மாற்றம் செய்யப்பட்டு, புதிய கலால் கொள்கை கடந்த ஆண்டு நவம்பரில் அமலுக்கு வந்தது.

இதில், மதுபான தொழிற்சாலைகளுக்கு பல்வேறு சலுகைகள், வரி விலக்குள்ள அளிக்கப்பட்டு வருப்பதாகவும், இதற்காக பல கோடி ரூபாய் லஞ்சமாக பெறப்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வரும் சிபிஐ, மணீஷ் சிசோடியாவின் வீடு, அலுவலகம் மற்றும் வங்கி, ‘லாக்கர்’களை சோதனையிட்டது. அவருடன் நெருங்கிய தொடர்பில் உள்ள கட்சியினர், மதுபான அதிபர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. அதனடிப்படையில், மணீஷ் சிசோடியா உட்பட 14 பேர் மீது, சி.பி.ஐ., வழக்குப் பதிவு செய்துள்ளது.

இந்நிலையில், இந்த ஊழல் விவகாரம் தொடர்பாக இன்று காலை சி.பி.ஐ., அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகும்படி மணீஷ் சிசோடியாவுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. சிபிஐ அலுவலகத்தில் நேரில் ஆஜராகும் அவரை சிபிஐ கைது செய்ய வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

ஏற்கனவே ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், டெல்லி சுகாதாரத் துறை அமைச்சராக இருந்தவருமான சத்தியேந்தர் ஜெயின், சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

Views: - 391

0

0