மீண்டும் ஆட்டத்தை ஆரம்பித்த கொரோனா: சத்தீஷ்கரில் பள்ளி,கல்லூரிகள் மூடல்..!!

Author: Aarthi Sivakumar
21 March 2021, 5:20 pm
chattisghar - updatenews360
Quick Share

ராய்ப்பூர்: கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் சத்தீஷ்கர் மாநிலத்தில் பள்ளி, கல்லூரிகள் மற்றும் அங்கன்வாடி மையங்கள் உடனடியாக மூடப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் மீண்டும் வேகமெடுக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக நேற்று மட்டும் நாடு முழுவதும் 40 ஆயிரத்து 953 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், மக்கள் அச்சமடைந்துள்ளனர். இதற்கிடையில், சத்தீஷ்கர் மாநிலத்தில் கடந்த பிப்ரவரி மாதம் 15ம் தேதி முதல் கல்லூரிகள் மற்றும் பள்ளிகள் திறக்கப்பட்டன.

பள்ளிகளில் 9 முதல் 12 வரையிலான வகுப்புகள் மீண்டும் தொடங்கப்பட்டது. அங்கன்வாடி மையங்களும் திறக்கப்பட்டன. ஆனால், சத்தீஷ்கரில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் அதிகரிக்கத்தொடங்கியுள்ளது. கடந்த சில நாட்களாக தினமும் ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு வருகிறது.

அம்மாநிலத்தில் இதுவரை மொத்தம் 3 லட்சத்து 20 ஆயிரத்திற்கும் அதிமானோர் கொரோனா தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர். இந்நிலையில், மாநிலத்தில் கொரோனா தொடர்ந்து அதிகரித்து வருவதால் பள்ளிகள், கல்லூரிகள், அங்கன்வாடி மையங்களை உடனடியாக (நாளை முதல்) மூட சத்தீஷ்கர் அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்த தகவலை அம்மாநில அமைச்சர் ரவீந்திர சௌபாய் தெரிவித்துள்ளார். மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு பள்ளி,கல்லூரிகள் மூடப்படுவதாகவும் அடுத்த அறிவிப்பு வரும் வரை ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்படும் எனவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 188

0

0