உத்தரகாண்ட் மாநிலத்தின் இரண்டாவது பெண் ஆளுநர் ராஜினாமா : குடியரசுத் தலைவரிடம் கடிதத்தை ஒப்படைத்தார்!!

Author: Udayachandran RadhaKrishnan
8 September 2021, 2:42 pm
Uttharakhand Governor - Updatenews360
Quick Share

உத்தராகண்ட் கவர்னர் பேபி ராணி மவுரியா தனது ராஜினாமா கடிதத்தை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திடம் சமர்ப்பித்தார்.

உத்தராகண்ட் மாநில ஆளுநர் பேபி ராணி மவுரியா தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். தனது ராஜினாமா கடிதத்தை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு அனுப்பியுள்ளதாக கவர்னரின் செயலாளர் பி.கே.சாந்த் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
உத்தராகண்ட் ஆளுநராக மூன்று ஆண்டுகள் நிறைவு செய்த மவுரியா, ஆக்ரா மேயராக இருந்தார் என்பது குறிப்பிடப்படுகிறது. கடந்த 2018ஆம் ஆண்டு ஆகஸ்ட் 21ம் தேதி உத்தராகண்டின் 7வது ஆளுநராக பேபி ராணி மவுரியா நியமிக்கப்பட்டார்.

ஆகஸ்ட் 26-ஆம் தேதி உத்தராகண்டில் உள்ள ராஜ் பவனில் நடந்த விழாவில் அவர் பதவியேற்றார். 2009ல் முதல்வராக இருந்த மார்கரெட் ஆல்வாவுக்குப் பிறகு, உத்தராகண்டின் ஆளுநராக பணியாற்றிய இரண்டாவது பெண்மணி பேபி ராணி மவுரியா ஆனார்.

இதனிடையே, சமீபத்தில் பேபி ராணி மவுரியா டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்த நிலையில், தற்போது தனது பதவியை ராஜினாமா செய்வதாக தெரிவித்துள்ளார்.

பேபி ராணி மவுரியா உபி அரசியலில் தீவிரம் காட்டுவதாகவும், அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் உத்தரபிரதேச மாநில சட்டமன்ற தேர்தலில் மவுரியா போட்டியிடலாம் என்றும் தகவல் தெரிவிக்கப்படுகிறது.

Views: - 455

0

0