அல்கொய்தா பயங்கரவாதியின் வீட்டில் ரகசிய அறை..! என்ஐஏ விசாரணையில் அம்பலம்..!
21 September 2020, 7:09 pmமேற்கு வங்காளத்தின் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் இருந்து கைது செய்யப்பட்ட 6 அல்கொய்தா பயங்கரவாதிகளில் ஒருவரான அபு சுஃபியான் என்பவரின் வீட்டில் நேற்று நடத்திய சோதனையில் என்.ஐ.ஏ. ஒரு ரகசிய அறையை கண்டுபிடித்துள்ளது.
மாவட்டத்தின் ராணிநகர் பகுதியில் உள்ள வீட்டில் நடந்த சோதனையின் போது 10×7 அடி அளவிலான இந்த அறை கண்டுபிடிக்கப்பட்டதாக மாவட்ட உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ஒற்றை மாடி வீட்டில் நடந்த ஒரு மணி நேர சோதனையின் போது பல மின்னணு கேஜெட்டுகள் மற்றும் பல்பு பலகை ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டன என அவர் மேலும் கூறினார்.
கழிப்பறைக்கு செப்டிக் டேங் கட்டுவதற்காக அறை தோண்டப்பட்டதாக சுஃபியானின் மனைவி பின்னர் செய்தியாளர்களிடம் கூறினார். இது குறித்து நாங்கள் போலீசாரிடம் கூறியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
விசாரணையின் போது, அறை குறித்து சுஃபியான் புலனாய்வாளர்களிடம் கூறினார் என அந்த அதிகாரி கூறினார். இந்த ஆறு பேரின் விசாரணையும் கொல்கத்தாவில் நேற்று நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
முன்னதாக மேற்கு வங்கம் மற்றும் கேரளாவைச் சேர்ந்த ஒன்பது அல்கொய்தா பயங்கரவாதிகளை தேசிய புலனாய்வு அமைப்பு சனிக்கிழமை கைது செய்தது. அவர்களில் 6 பேர் முர்ஷிதாபாத் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். மேலும் 3 பேர் கேரளாவின் எர்ணாகுளத்தில் இருந்து கைது செய்யப்பட்டனர்.
சிறப்பு என்ஐஏ நீதிமன்ற நீதிபதி பிரசென்ஜித் பிஸ்வாஸ் முர்ஷிதாபாத்தில் இருந்து கைது செய்யப்பட்ட 6 பேரை என்ஐஏ காவலில் வைத்தார். சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.