ட்ரோன் எதிர்ப்பு உபகரணம்: ஜம்மு – பஞ்சாப் எல்லையில் பயன்படுத்த பாதுகாப்பு படை திட்டம்..!!

Author: Aarthi
23 July 2021, 5:25 pm
Quick Share

புதுடெல்லி: ட்ரோன் எதிர்ப்பு உபகரணத்தை சோதித்து பார்ப்பதற்காக ஜம்மு – பஞ்சாப் எல்லைக்கு கொண்டு வருமாறு எல்லை பாதுகாப்பு படை கேட்டுக் கொண்டுள்ளது.

ஜம்மு காஷ்மீரின் அக்னூர் பகுதியில் அத்துமீறி புகுந்த ஒரு ட்ரோன் விமானத்தை பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தினர். ட்ரோனுடன் இணைக்கப்பட்டிருந்த 5 கிலோ எடை கொண்ட வெடிகுண்டு கைப்பற்றப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் இருந்து செயல்படும் காலிஸ்தான் பயங்கரவாத குழுக்கள், ஜம்மு காஷ்மீர் மற்றும் பஞ்சாபில் உள்ள தங்களது பயங்கரவாத தொடர்புகளுக்கு ஆயுதங்களையும், வெடிகுண்டுகளையும் கடத்துவதற்கும், குண்டு வீசி தாக்குதல் நடத்தவும் ஆளில்லா டிரோன்களை பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது.

கர்நாடக மாநிலம் கோலாரில் சோதித்துப் பார்க்கப்பட்ட ட்ரோன் எதிர்ப்பு உபகரணத்தின் புரோட்டோடைப்பை, சோதித்து பார்ப்பதற்காக, ஜம்மு மற்றும் பஞ்சாப் எல்லைக்கு கொண்டு வருமாறு டிஆர்டிஓவிடம் எல்லை பாதுகாப்பு படை கேட்டுக் கொண்டுள்ளது. கடந்த மாதம் 27ம் தேதி ஜம்முவில் உள்ள விமானப்படைத் தளத்தில் 2 டிரோன்கள் மூலம் பாகிஸ்தானில் உள்ள லஷ்கர்-இ- தொய்பா பயங்கரவாதிகள் இரண்டு குண்டுகளை வீசினர்.

இந்நிலையில், கர்நாடக மாநிலம் கோலாரில் டிஆர்டிஓவின் டிரோன் எதிர்ப்பு உபகரணத்தை சோதித்து பார்க்கப்பட்டது. அப்போது அங்கிருந்த கட்டுப்படுத்தப்பட்ட சூழலில் அது சிறப்பாக செயல்பட்டதாக அதை பார்த்த பாதுகாப்புப் படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 4 கிலோ மீட்டர் தூரம் வரையிலான ரேடார் கண்காணிப்பு திறன், 2 கிலோ மீட்டருக்குள் எதிரி டிரோன்களை தடுக்கும் திறன், ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்குள் அவற்றை அழிக்கும் திறன் ஆகியவையும் அதற்கு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஏற்கனவே, பிரதமர் மோடியின் பயண வாகன அணிவகுப்புடன், சோதித்துப் பார்க்கப்பட்ட இந்த டிரோன் எதிர்ப்பு உபகரணமும் கொண்டு செல்லப்படுகிறது. இந்த நிலையில் தான் அதனை எல்லைக்கு அவசரமாக கொண்டு வருமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

Views: - 170

0

0