இப்ப இது தான் பிரச்சினையா..? கடுப்படித்த அசோக் கெலாட்..! கொந்தளித்த ஆனந்த் சர்மா..! காங்கிரஸ் களேபரம்..!

22 January 2021, 7:40 pm
Ashok_Gehlot_Anand_Sharma_UpdateNews360
Quick Share

காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் இன்று மூத்த தலைவர்கள் அசோக் கெலாட் மற்றும் ஆனந்த் சர்மா இடையே கடும் மோதல் வெடித்ததாகக் கூறப்படுகிறது.

தகவலறிந்த வட்டாரங்களின் படி, ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட், யாரையும் பெயரிடாமல், நாட்டில் பல பிரச்சினைகள் உள்ள நிலையில், சில தலைவர்களுக்கு உட்கட்சித் தேர்தல் விஷயங்கள் மட்டுமே முக்கியமாக உள்ளது எனக் கூறியுள்ளார்.

அசோக் கெலாட்டின் அறிக்கைக்கு பதிலளித்த ஆனந்த் ஷர்மா, “நாங்கள் கட்சிக்காக நிறைய பங்களிப்பு செய்துள்ளோம், கட்சிக்கு 42 ஆண்டுகளை வழங்கியுள்ளோம்” என்று கூறினார்.
இதனால் இரு தரப்புக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்படும் சூழல் உருவானது. எனினும் பின்னர் இருதரப்பும் சமாதானப்படுத்தப்பட்டதாகத் தெரிகிறது.

மிகப் பழைய கட்சியான காங்கிரசின் தலைவர்களில் ஒரு பகுதியினர் தலைமை குறித்து கேள்விகளை எழுப்பி வருகின்றனர். கடந்த ஆண்டு ஆகஸ்டில், 23 காங்கிரஸ் தலைவர்கள் குழு, சோனியா காந்திக்கு எழுதிய கடிதத்தில், முழுநேர, செயலாற்றும் தலைமையின் அவசியத்தை வலியுறுத்தியிருந்தது.

எதிர்ப்பாளர்களை சமாதானப்படுத்தும் ஒரு வெளிப்படையான முயற்சியில், குலாம் நபி ஆசாத், ஆனந்த் சர்மா, பூபிந்தர் சிங் ஹூடா, பிருத்விராஜ் சவான், கபில் சிபல், மணீஷ் திவாரி மற்றும் முகுல் வாஸ்னிக் ஆகியோர் அடங்கிய குழுவை சோனியா காந்தி சந்தித்தார்.

இதையடுத்து வரும் ஜூன் மாதத்திற்குள் காங்கிரசில் புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். இந்நிலையில் இன்றைய கூட்டத்தைத் தொடர்ந்து, ஜூன் 2021’க்குள் கட்சிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவரைப் பெறுவதாக காங்கிரஸ் அறிவித்தது.

இதற்கிடையே, எந்தவொரு நிலையிலும் ஜூன் 2021’க்குள் தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் தலைவர் பொறுப்பில் இருப்பார் என்று காங்கிரஸ் செயற்குழு முடிவு செய்தது என்று அகில இந்திய காங்கிரசின்  பொதுச் செயலாளர் கே சி வேணுகோபால் கட்சியின் மிக உயர்ந்த முடிவெடுக்கும் குழுவின் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.