பரபரப்புக்காக மட்டுமே..! ரிஹானா உள்ளிட்ட வெளிநாட்டு பிரபலங்களின் விவசாய போராட்ட கருத்துக்கு மத்திய அரசு பதிலடி..!

3 February 2021, 1:13 pm
Farmers_Protest_UpdateNews360
Quick Share

இந்தியாவில் நடந்து வரும் விவசாயிகள் போராட்டங்களுக்கு சர்வதேச பாப் இசைப் பாடகி ரிஹானா குரல் கொடுத்த ஒரு நாள் கழித்து, இந்த விவகாரம் தொடர்பாக ஒரு சில வெளிநாட்டு பிரபலங்கள் வரிசையாக கருத்து கூறிய நிலையில், மத்திய அரசு இதை கடுமையாகக் கண்டித்துள்ளது.

மத்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியாவின் சில பகுதிகளில் உள்ள விவசாயிகளில் மிகச் சிறிய பகுதியினர் இந்த வேளாண சீர்திருத்தங்கள் குறித்து சில சந்தேகங்களைக் கொண்டுள்ளனர்” என்று தெரிவித்துள்ளது.

ஜனவரி 26’ஆம் தேதி டெல்லியில் நடந்த வன்முறை மற்றும் செங்கோட்டையில் நடந்த மோசமான செயலைக் கண்டித்த அமைச்சகம், விவசாயிகளின் ஆர்ப்பாட்டத்தில் சில சுயநல விரோதக் குழுக்கள் தங்கள் நிகழ்ச்சி நிரலை செயல்படுத்த முயற்சிப்பதாகக் கூறியது.

“இந்த சமூக விரோத சுயநலக் குழுக்கள் இந்தியாவுக்கு எதிராக சர்வதேச ஆதரவைத் திரட்டவும் முயன்றன. இதுபோன்ற அமைப்புகளால் தூண்டப்பட்டு, மகாத்மா காந்தி சிலைகள் உலகின் சில பகுதிகளில் இழிவுபடுத்தப்பட்டுள்ளன. இது இந்தியாவிற்கும் எல்லா இடங்களிலும் நாகரிக சமுதாயத்திற்கும் மிகவும் கவலை அளிக்கிறது.” என்று அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.

மேலும், ரிஹானாவைப் போன்று கருத்து தெரிவிப்பவர்கள், பரபரப்புக்காக மட்டுமே வேகவேகமாக கருத்து தெரிவிக்காமல், உண்மைகளை தெரிந்துகொள்ளும்படி கேட்டுக் கொள்வதாகக் கூறியுள்ளது. 

ரிஹானாவின் ட்வீட் ட்விட்டரில் உடனடி கவனத்தைப் பெற்றது. சில லட்சத்துக்கும் மேற்பட்ட ரீட்வீட்களும், இரண்டு லட்சம் லைக்குகளும் ஒரு சில மணி நேரத்திற்குள் கிடைத்தன.

பாலிவுட் நடிகைகள் ரிச்சா சாதா மற்றும் ஸ்வாரா பாஸ்கர் ஆகியோர் ரிஹானாவின் கருத்துக்களைப் பாராட்டினர். அதே நேரத்தில் நடிகை கங்கனா ரனவத் இதை விமர்சித்தார்.

Views: - 0

0

0