லிபியாவில் கடத்தப்பட்ட இந்தியர்கள்..! அனைவரையும் பத்திரமாக மீட்கப் போராடும் மத்திய அரசு..!

Author: Sekar
9 October 2020, 1:40 pm
Delhi_South_Block_UpdateNews360
Quick Share

ஆந்திரா, பீகார், குஜராத் மற்றும் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த ஏழு இந்தியர்கள் கடந்த மாதம் லிபியாவில் கடத்தப்பட்டனர் மற்றும் அவர்களின் விடுதலையைப் பெறுவதற்காக ஆப்பிரிக்க தேசத்தில் உள்ள அதிகாரிகளுடன் இந்தியா தொடர்பில் உள்ளது என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

செப்டம்பர் 14’ஆம் தேதி இந்தியாவிற்கு வர திரிப்போலி விமான நிலையத்திற்கு சென்று கொண்டிருந்தபோது இந்தியர்கள் அஸ்வேரிஃப் என்ற இடத்தில் கடத்தப்பட்டனர் என்று வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவாஸ்தவா ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

“அரசாங்கம் அவர்களது குடும்ப உறுப்பினர்களுடன் தொடர்பில் உள்ளது. மேலும் லிபிய அதிகாரிகள் மற்றும் அவர்கள் பணிபுரிந்த நிறுவனத்தின் முதலாளியுடன் கலந்தாலோசித்து சாத்தியமான அனைத்து முயற்சிகளையும் நாங்கள் மேற்கொண்டு வருகிறோம். நமது நாட்டினரைக் கண்டுபிடித்து விரைவில் பாதுகாப்பாக மீட்டுக்கொண்டு வருவோம் என நம்பிக்கை உள்ளது” என்று அவர் கூறினார். .

கட்டுமான மற்றும் எண்ணெய் வயல் விநியோக நிறுவனத்தில் இந்தியர்கள் வேலை செய்கிறார்கள் என்று ஸ்ரீவஸ்தவா கூறினார். “கடத்தல்காரர்களால் முதலாளியைத் தொடர்பு கொண்டு, இந்தியர்கள் பாதுகாப்பாக மற்றும் நன்றாக இருக்கிறார்கள் என்பதற்கு ஆதாரமாக புகைப்படங்களைக் காட்டியுள்ளனர்” என்று அவர் மேலும் கூறினார்.

வட ஆப்பிரிக்காவில் எண்ணெய் வளம் நிறைந்த நாடான லிபியா, 2011’ல் மும்மர் கடாபியின் நான்கு தசாப்த ஆட்சியின் வீழ்ச்சிக்குப் பின்னர் பெரிய அளவிலான வன்முறை மற்றும் அமைதியின்மையைக் கண்டிருக்கிறது.

துனிசியாவில் உள்ள இந்திய தூதரகம் லிபிய அரசாங்க அதிகாரிகளையும், அங்குள்ள சர்வதேச அமைப்புகளையும் அணுகியுள்ளது. இந்திய நாட்டினரை மீட்பதற்கு அவர்களின் உதவியை நாடுகிறது.

முன்னதாக அங்குள்ள பாதுகாப்பு நிலைமையைக் கருத்தில் கொண்டு லிபியாவுக்குப் பயணம் செய்வதைத் தவிர்ப்பதற்காக இந்திய குடிமக்களுக்கு 2015 செப்டம்பரில் அரசாங்கம் ஒரு ஆலோசனை வழங்கியது குறிப்பிடத்தக்கது.

லிபியாவில் மோசமடைந்து வரும் பாதுகாப்பு நிலைமையைக் கருத்தில் கொண்டு, நோக்கம் எதுவாக இருந்தாலும், 2016 மே மாதம் மத்திய அரசு லிபியாவுக்கு செல்ல முழுமையான பயணத் தடையை விதித்தது. இந்த பயண தடை இன்னும் நடைமுறையில் உள்ளது என ஸ்ரீவஸ்தவா மேலும் தெரிவித்தார்.

Views: - 38

0

0