உத்தவ் தாக்கரே முதல்வராக இருப்பது ஜனநாயகத்திற்கு அவமானமா..? நிதீஷை வம்பிழுக்க நினைத்து தானே சிக்கிய சிவசேனா..!

12 November 2020, 1:35 pm
Nitish_kumar_UpdateNews360
Quick Share

கடந்த ஆண்டு நவம்பரில் மகாராஷ்டிராவில் தேர்தல் முடிந்த பிறகு, சிவசேனாவுக்கும் பாரதிய ஜனதாவுக்கும் இடையிலான கூட்டணி திடீரென முடிவடைந்து, உத்தவ் தாக்கரே சிவா சேனா தரப்பிலிருந்து முதலமைச்சராக வழிவகுத்தது. அப்போது சிவசேனா மாநிலத்தில் சந்தர்ப்பவாத அரசியலை முன்வைத்ததாக பரபரப்பாக பேசப்பட்டது.

288 உறுப்பினர்களைக் கொண்ட மகாராஷ்டிரா சட்டமன்றத்தில் இரண்டாவது பெரிய கட்சியாக இருக்கும் சிவசேனா, பாஜவுடனான கூட்டணியை உதறி, போட்டியாளர்களான தேசியவாத காங்கிரஸ் கட்சி மற்றும் காங்கிரசுடன் கூட்டாக அரசாங்கத்தை அமைத்தது. இந்த தேர்தலில் 105 இடங்களை வென்று தனிப்பெரும் கட்சியாக பாஜக உருவெடுத்தது.

இந்நிலையில், சமீபத்தில் முடிவடைந்த பீகார் தேர்தலில் சற்றே இதற்கு ஒத்த சூழ்நிலை ஏற்பட்டபோது, நிதீஷ்குமார் மீண்டும் முதல்வர் பதவியை ஏற்பதை சிவசேனா கடுமையாக விமர்சித்துள்ளது.

நடந்து முடிந்த பீகார் சட்டசபைத் தேர்தலில் தேஜஸ்வி யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளத்திற்கு அடுத்து பாஜக இரண்டாவது இடத்தைப் பிடித்தது, ஆனால் மூன்றாவது இடம் பிடித்த ஐக்கிய ஜனதா தளத்தின் நிதீஷ் குமார் மீண்டும் முதல்வராக பொறுப்பேற்க உள்ளார்.

ஆனால், தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்று, நிதீஷ் குமார் மீண்டும் ஆட்சியமைக்க உள்ளதை பொறுக்க முடியாத சிவசேனா, போட்டியை இழந்த மல்யுத்த வீரருக்கு தங்கப் பதக்கம் வழங்குவது போன்றது இது என்று கூறி நிதீஷ் குமாரை விமர்சித்துள்ளது.

பீகார் சட்டமன்றத் தேர்தலில் நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் வெறும் 43 இடங்களை மட்டுமே பெற்றது. இந்நிலையில் சிவசேனா தனது அதிகாரப்பூர்வ பத்திரிகையான சாம்னாவில் வெளியிட்டுள்ள ஒரு தலையங்கத்தில், பீகாரில் தேஜஸ்வி யாதவ் தான் உண்மையான வெற்றியாளர் என்று கூறியுள்ளது.

“பீகாரின் தலைமை இறுதியாக பாரதிய ஜனதா கட்சியின் கைகளுக்கு வந்துவிட்டது. நிதீஷ் குமார் முதல்வராவார். பீகாரில் பாஜக ஒரு பெரிய வெற்றியைப் பெற்றது. அதற்கு பிரதமர் நரேந்திர மோடி தான் காரணம் என்று சொல்ல வேண்டும். புள்ளிவிவர அடிப்படையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்றாலும் உண்மையான வெற்றியாளர் 31 வயதான தேஜாஷ்வி யாதவ் தான்” என்று சாம்னாவில் வெளியிடப்பட்ட தலையங்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தக் கட்டுரையில் நிதீஷ்குமார் தனது கட்சி மூன்றாவது இடத்தைப் பிடித்த போதிலும் முதல்வர் பதவி வழங்கப்பட்டால், அது ஜனநாயகத்தின் அவமானம் என்றும் கூறியுள்ளது.

நிதீஷ் குமாரையும், பாஜகவையும் விமர்சிப்பதற்காக சிவசேனா இந்த கட்டுரையை வெளியிட்டாலும், தற்போது மகாராஷ்டிராவில் அதிக இடங்களை வெல்லாத உத்தவ் தாக்கரே முதல்வராக பதவி வகிப்பதை ஜனநாயகத்தின் அவமானமாக கருதுகிறதா என்று பாஜகவினர் கேள்வியெழுப்புகின்றனர்.

Views: - 22

0

0