கட்டுக்கடங்காத கொரோனா 2.0..! டெல்லியில் மீண்டும் முழு ஊரடங்கு..! அரவிந்த் கெஜ்ரிவால் அரசு அறிவிப்பு..!

19 April 2021, 12:32 pm
Kejriwal_UpdateNews360
Quick Share

டெல்லியில் கொரோனா பாதிப்புகள் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு அதிகரித்துள்ள நிலையில், இன்று இரவு முதல் ஒரு வார கால ஊரடங்கு உத்தரவு விதிக்க அரவிந்த் கெஜ்ரிவால் அரசு முடிவு செய்துள்ளது. 

டெல்லியின் துணைநிலை ஆளுநர் அனில் பைஜால், முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா மற்றும் டெல்லி போலீஸ் கமிஷனர் எஸ்.என்.ஸ்ரீவஸ்தவா உள்ளிட்ட முக்கிய அதிகாரிகளின் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு உத்தரவை ஒரு வாரத்திற்கு அமல்படுத்துவது குறித்த முடிவை அரவிந்த் கெஜ்ரிவால் தான் முன்மொழிந்து, அதற்கு துணைநிலை ஆளுநர் ஒப்புதல் அளித்ததாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. வைரஸ் பரவுவதைத் தடுக்க டெல்லி அரசாங்கம் கடந்த வாரம் ஊரடங்கு கட்டுப்பாடுகளை அதிகப்படுத்தியிருந்த நிலையில், தற்போது முழு ஊரடங்கை அறிவித்துள்ளது.

முன்னதாக கடந்த வாரம், டெல்லியில் வார இறுதி ஊரடங்கு விதிக்கப்பட்டதை தற்போதைய அறிவிப்பின் மூலம் ஒரு வாரத்திற்கு முழுதாக நீட்டித்துள்ளது.

இதற்கிடையே, டெல்லியில் நேற்று 25,462 புதிய கொரோனா பாதிப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் கொரோனா நேர்மறை விகிதம் 29.74 சதவிகிதம் வரை உயர்ந்துள்ளது. அதாவது டெல்லியில் சோதனை செய்யப்படும் ஒவ்வொரு மூன்றாவது மாதிரியும் நேர்மறையானதாக மாறிவருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இந்த நோய் காரணமாக 161 பேர் இறந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஒரு நாள் முன்பு, நகரத்தில் 24,375 கொரோனா பாதிப்புகள் மற்றும் 167 இறப்புகள் பதிவாகியுள்ளன.

கடந்து செல்லும் ஒவ்வொரு மணி நேரத்திலும் நிலைமை தீவிரமடைந்து வருவதால், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் ஆகியோருக்கு கெஜ்ரிவால் கடிதங்களை எழுதி உதவி கோரியுள்ளார்.

“டெல்லியில் கொரோனா நிலைமை மிகவும் மோசமாகிவிட்டது. படுக்கைகள் மற்றும் ஆக்சிஜனின் பற்றாக்குறை உள்ளது. டெல்லியில் உள்ள மத்திய அரசு மருத்துவமனைகளில் உள்ள 10,000 படுக்கைகளில் குறைந்தது 7,000 கொரோனா நோயாளிகளுக்கு ஒதுக்கப்பட வேண்டும். உடனடியாக டெல்லிக்கு மருத்துவ ஆக்சிஜன் வழங்கப்பட வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.” என்று அவர் பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

இதற்கிடையில், கொரோனா பாதிப்புகள் அதிவேகமாக அதிகரித்ததைத் தொடர்ந்து ஆக்சிஜன் மற்றும் ரெம்டெசிவிர் மருந்து கொள்முதல் மற்றும் வழங்கல் ஆகியவற்றைக் கண்காணிக்க டெல்லி அதிகாரிகள் இன்று இரண்டு குழு அதிகாரிகளை நியமித்தனர்.

Views: - 53

0

0