“மாநகராட்சியே சுயமாக எடுத்த முடிவு”..! கங்கனா அலுவலகம் இடிப்பு குறித்து என்சிபி தலைவர் சரத் பவார் அறிக்கை..!

11 September 2020, 4:36 pm
kangana_sharad_pawar_updatenews360
Quick Share

மும்பையில் உள்ள நடிகை கங்கனா ரனவத் அலுவலகத்தை இடிக்கும் முடிவை மும்பை மாநகராட்சி சுயமாக எடுத்ததாக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (என்சிபி) தலைவர் சரத் பவார் இன்று தெரிவித்தார்.

இந்த விவகாரம் குறித்து மேலும் பேசிய பவார், இந்த செயல்பாட்டில் மாநில அரசுக்கு எந்தப் பங்கும் இல்லை என்றும், அனைத்து விதிகள் மற்றும் விதிமுறைகளின்படியே பி.எம்.சி கங்கனாவின் மும்பை அலுவலகத்தை இடித்தது என்றும் கூறினார். 

மும்பையை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருடன் ஒப்பிட்டு, நகர காவல்துறையை விமர்சித்ததற்காக சிவசேனா கங்கனா ரனவத் மீது கோபத்தில் உள்ளனர். மேலும் இந்த விவகாரத்தில் கங்கனா ரனவத்தும் தன்னுடைய கருத்தில் உறுதியாக உள்ளார்.  

மும்பையில் உள்ள கங்கனாவின் அலுவலகம் அவர் நகரத்தில் இல்லாதபோது பி.எம்.சி’யால் இடிக்கப்பட்டது. புல்டோசர் மற்றும் இதர ஆயுதங்களைப் பயன்படுத்தி, பி.எம்.சி குழு புதன்கிழமை காலை கங்கனா ரனவத்தின் பங்களாவில் மாநகராட்சியின் ஒப்புதல் இல்லாமல் செய்யப்பட்டதாகக் கூறப்படும் மாற்றங்களை இடித்தது.

முன்னதாக நேற்று, கங்கனா தான் வசிக்கும் கட்டிடம் என்சிபி தலைவர் சரத் பவாருக்கு சொந்தமானது என்று கூறியதாக சில அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

“இந்த பிரச்சினை எனக்கு மட்டுமல்ல, முழு கட்டிடத்திற்கும் இருந்தது. இது எனது ஒருவரின் பிரச்சினை அல்ல. இந்த கட்டிடம் சரத் பவருக்கு சொந்தமானது. நாங்கள் அவரது கூட்டாளரிடமிருந்து பிளாட் வாங்கினோம். எனவே இதற்கு நான் பொறுப்பல்ல.” என கட்டிட இடிப்பு குறித்து கங்கனா ரனவத் புதன்கிழமை ட்வீட் செய்தார்.

2018’ஆம் ஆண்டில் டி.பி. ப்ரீஸ் என்ற குடியிருப்பில் உள்ள தனது பிளாட்டுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டதாக கங்கனா மேலும் கூறினார்.

எனினும், பவார் வியாழக்கிழமை அந்தக் கருத்தை மறுத்தார். நடிகை கூறியதில் எந்த உண்மையும் இல்லை என்று கூறினார். மேலும் இந்த விவகாரத்தால் மாநில அரசுக்கு கெட்ட பெயர் ஏற்பட்டுள்ள நிலையில், சரத் பவார் இதற்கும் மாநில அரசுக்கும் எந்த தொடர்பும் இல்லை என மறுத்துள்ளார்.

சரத் பவார் என்னதான் மறுப்பு அறிக்கை வெளியிட்டாலும், சிவசேனாவுடனான மோதலுக்கு அடுத்த நாளே சிவசேனாவின் கட்டுப்பாட்டில் உள்ள மும்பை மாநகராட்சியின் அதிகாரிகள் வரிந்து கட்டிக்கொண்டு வந்து, கங்கனாவின் அலுவலகத்தை மட்டும் இடித்ததன் மூலம் இதில் மகாராஷ்டிரா ஆளும் கட்சியான சிவசேனாவின் பங்கு உள்ளதை மக்கள் உணர்ந்துள்ளனர் எனப் பேசப்படுகிறது.

Views: - 8

0

0