ஆர்யன்கான் வழக்கில் திடீர் திருப்பம் : சர்ச்சைக்குள்ளான அதிகாரி திடீர் மாற்றம்!!
Author: Udayachandran RadhaKrishnan5 November 2021, 8:44 pm
போதைப் பொருள் வழக்கில் சிக்கிய ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் விவகாரத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.
மும்பை சொகுசு கப்பலில் கடந்த 2-ந் தேதி போதை பொருள் தடுப்பு பிரிவினர் அதிரடி சோதனை நடத்தினர். சோதனையில் போது கப்பலில் போதை விருந்து நடந்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து வழக்கில் பிரபல நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடமிருந்து போதை பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டது.இதில் ஆர்யன் கான் மும்பை ஆர்தர் ரோடு ஜெயிலில் அடைக்கப்பட்டார். ஆர்யன் கான் உள்ளிட்டோரின் ஜாமீன் மனுவை சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து மும்பை உயர் நீதிமன்றத்தில் அவர்கள் மேல்முறையீடு செய்தனர்.
இதை விசாரித்த நீதிமன்றம், கடந்த 28-ம் தேதி ஆர்யன் உட்பட மூவருக்கு ஜாமீன் வழங்கியது. இதைதொடர்ந்து ஜெயிலில் அடைக்கப்பட்ட ஆர்யன் கான் அக்டோபர் மாதம் 30 ம் தேதி ஜாமீனில் விடுதலை ஆனார்.
இதனிடையே ஆர்யன்கானை விடுவிக்க ரூ.25 கோடி பேரம் பேசப்பட்டதாகவும், அதில் 8 கோடி ரூபாய் சமீர் வான்கடேவுக்கு கொடுக்க பேரம் நடந்ததாகவும் புகார் கூறப்பட்டது. இது குறித்து, என்.சி.பி.,யின் வடக்கு மண்டல துணை இயக்குனர் ஜெனரல் கியானேஷ்வர் சிங் தலைமையிலான மூன்று பேர் அடங்கிய குழு விசாரித்தது. இந்நிலையில் இன்று ஆர்யன் கான் வழக்கு விசாரணையிலிருந்த சமீர் வான்கடே அதிரடியாக விடுவிக்கப்பட்டார்.
டெல்லி ஆர்.கே.புரத்தில் உள்ள என்.சி.பி., தலைமையகத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டதாகவும், சமீர் வான்கடேவுக்கு பதிலாக சஞ்சய் சிங் என்பவர் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
0
0