‘நீதிமன்ற அவமதிப்பு வழக்‍கு’ – மன்னிப்பு கேட்க முடியாது என வழக்‍கறிஞர் பிரசாந்த் பூஷண் திட்டவட்டம்…!

20 August 2020, 5:55 pm
Quick Share

நீதிமன்ற அவமதிப்பு வழக்‍கில் மன்னிப்புக்‍கோர முடியாது என மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். என்ன தண்டனை அளித்தாலும், மகிழ்ச்சியுடன் ஏற்க தயார் என்றும் அவர் கூறியுள்ளார்.

ஜனநாயகத்தின் அழிவில் உச்சநீதிமன்றத்தின் பங்கு என்ற தலைப்பில் தனது ட்விட்டர் பக்‍கத்தில் கருத்து பதிவிட்ட மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, ஹார்லி டேவிட்சன் பைக்‍குடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை சுட்டிக்காட்டி, ஹெல்மெட் மற்றும் முகக்கவசம் இல்லாமல் வாகனத்தை இயக்குவது ஏன் என கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்த விவகாரங்கள் தொடர்பாக விளக்‍கம் கேட்டு, பிரசாந்த் பூஷணுக்‍கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது. இதற்கு பதிலளித்த பிரசாந்த் பூஷண், தன்னுடைய ட்விட்டர் பதிவுகளில், நீதிபதிகளின் தனிப்பட்ட நடவடிக்கைகள் மட்டுமே விமர்சிக்கப்பட்டிருந்ததாகவும், அவர்களின் நீதிமன்ற நடவடிக்கைகள் விமர்சிக்கப்படவில்லை என்றும் விளக்‍கம் அளித்தார்.

இருந்தபோதிலும், நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான 3 நீதிபதிகள் அடங்கிய உச்சநீதிமன்ற அமர்வு, பிரசாந்த் பூஷண், நீதிமன்றத்தை அவமதிப்பு செய்ததாக தீர்ப்பு வழங்கியது. அதற்கான தண்டனை விவரங்கள் விரைவில் அறிவிக்‍கப்படும் என்றும் தெரிவித்தது. இதையடுத்து, தண்டனை தொடர்பான விசாரணையை தள்ளி வைக்‍கக்‍கோரி பிரசாந்த் பூஷண் சார்பில், உச்சநீதிமன்றத்தில், நேற்று சீராய்வு மனு தாக்‍கல் செய்யப்பட்டது.

இந்நிலையில், தண்டனை தொடர்பான விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது, பிரசாந்த் பூஷண் தாக்‍கல் செய்த சீராய்வு மனு மீதான விசாரணைக்‍கு பின்னரே, தண்டனை குறித்து முடிவு செய்யப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனர். இதனிடையே இவ்வழக்‍கில், ஒருபோதும் மன்னிப்புக்‍கோர முடியாது என பிரசாந்த் பூஷண் கூறியுள்ளார். இதற்காக, தனக்‍கு என்ன தண்டனை அளித்தாலும், மகிழ்ச்சியுடன் ஏற்க தயார் என்றும் அவர் கூறியுள்ளார்.

Views: - 24

0

0