சூப்பர் இடத்திற்கு Take Of ஆன ஏர் இந்தியா… இனிமே நல்ல காலம்தான்.. மீண்டும் டாடா கன்ட்ரோல் : ஊழியர்கள் கொண்டாட்டம்..!!

Author: Babu Lakshmanan
8 October 2021, 4:57 pm
ratan tata - air india - updatenews360
Quick Share

நஷ்டத்தில் இயங்கி வரும் ஏர் இந்தியா விமான நிறுவனத்தை தனியாருக்கு விடும் ஏலத்தில் டாடா சன்ஸ் நிறுவனம் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏர் இந்தியா நிறுவனம் கடந்த 1952ஆம் ஆண்டு டாடா குழுமத்தால் நிறுவப்பட்டது. பின்னர், அந்த நிறுவனத்தின் அனைத்து பங்குகளையும் மத்திய அரசுக்கு விற்பனை செய்ததன் மூலம், ஏர் இந்தியா நிறுவனம் பொதுத்துறை நிறுவனமாக மாறியது. 68 ஆண்டுகளுக்கு மேலாக மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருந்த இந்த நிறுவனம், பல்லாயிரம் கோடி ரூபாய் கடனில் சிக்கித் திளைத்து வருகிறது.

எனவே, இந்த நிறுவனத்தின் பங்குகளை விற்று, அதனை தனியார்மயமாக்க பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த 2018ம் ஆண்டே முயற்சி எடுத்தது. நூற்றுக்கணக்கான விமானங்கள், ஆயிரக்கணக்கான விமானிகள் மற்றும் விமான சேவை குழுவினர் என ஏர் இந்தியா நிறுவனத்தின் மதிப்புமிக்க பல சொத்துக்களை மத்திய அரசு ஏலம் விட்டது.

ஆனால், யாரும் ஏர் இந்தியாவின் பங்குகளை வாங்க முன்வரவில்லை. அதோடு, விண்ணப்பிப்பதற்கான தேதியும் பலமுறை நீட்டிக்கப்பட்டது.

ஏலம் தொடர்பான அறிவிப்பு வெளியாகி 3 ஆண்டுகள் ஆன நிலையில், ஏர் இந்தியா விமான நிறுவனத்தை விலைக்கு வாங்க டாடா சன்ஸ் நிறுவனம் முன்வந்தது. மேலும், ஏர் இந்தியாவை விலைக்கு வாங்கும் டாடாவின் ஏல திட்டத்தை மத்திய அமைச்சர்கள் குழு ஏற்றதாகவும், உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையிலான குழு டாடாவின் திட்டத்துக்கு ஒப்புதல் அளித்ததாகவும் தகவல் வெளியானது.

இந்த நிலையில், ஏர் இந்தியா விமான நிறுவனத்தை ரூ.18,000 கோடிக்கு டாடா குழுமத்திற்கு விற்கப்பட்டதாக மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதன்மூலம், ஏர் இந்தியா நிறுவனம் மீண்டும் தனது தாய் நிறுவனத்திற்கே திரும்பி இருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும், ஏர் இந்தியா நிறுவனத்தை கைப்பற்றிய டாடா நிறுவனம், இனி சர்வதேச விமான சேவைகளில் அதீத கவனம் செலுத்த முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

Views: - 337

0

0