எஸ்.பி.பி. பெயரில் இசை பல்கலைக்கழகம் : ஆந்திர அரசுக்கு சந்திரபாபு நாயுடு வேண்டுகோள்..!

28 September 2020, 4:49 pm
SPB Mgm - updatenews360
Quick Share

மறைந்த பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் பெயரில் இசை பல்கலைக்கழகம் உருவாக்க வேண்டும் என்று ஆந்திர அரசுக்கு முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கோரிக்கை விடுத்துள்ளார்.

அண்மையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் சென்னையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கொரோனாவில் இருந்து அவர் மீண்டு வந்தாலும், நுரையீரல் தொற்று காரணமாக கடந்த 25ம் தேதி காலமானார். சுமார் 41 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ள அவர், பல்வேறு தேசிய விருதுகளையும் வாங்கியுள்ளார். அவரது மறைவு இசை உலகிற்கு பெரும் இழப்பாக கருதப்படுகிறது.

இந்த நிலையில், மறைந்த பாடகர் எஸ்.பி.பி.யின் நினைவாக, அவர் பிறந்த ஊரான ஆந்திர மாநிலம் நெல்லூரில் இசை பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் என அம்மாநில அரசுக்கு முன்னாள் முதலமைச்சரும், தெலுங்கு தேச கட்சியின் தலைவருமான சந்திர பாபு நாயுடு கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது :- தனது திறமையினால் தெலுங்கு மக்களை உலகளவில் எஸ்.பி. பாலசுப்ரமணியம் பெருமைப்படுத்தி உள்ளார். எனவே, அவரது நினைவாக இசை பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும். அதில், அவரது வெண்கல சிலையை நிறுவ வேண்டும். எஸ்.பி.பி.யின் பிறந்த தினத்தை அரசு விழாவாக கொண்டாட வேண்டும். மேலும், அவரது பெயரில் தேசிய விருதை நிறுவ வேண்டும், எனக் குறிப்பிட்டுள்ளார்.

Views: - 10

0

0