60 அடி ஆழ கிணற்றில் கார் விழுந்த விபத்தில் 2 பேர் பலி : மீட்கச் சென்ற வீரரும் உயிரிழந்த பரிதாபம்… தெலுங்கானாவில் நிகழ்ந்த சோகம்..!!

Author: Babu Lakshmanan
2 December 2021, 11:06 am
car fell in well - updatenews360
Quick Share

தெலுங்கானா : தெலுங்கானாவில் சாலை ஓரத்தில் உள்ள 60 அடி ஆழ கிணற்றில் கார் பாய்ந்த விபத்தில் மீட்கச் சென்றவர் உள்பட 3 பேர் உயிரிழந்த சோகம் அரங்கேறியுள்ளது.

தெலுங்கானா மாநிலம் சித்திபேட்டை மாவட்டம் துப்பாக்கா மண்டலத்திலுள்ள சிட்டப்பூர் கிராமம் அருகே நேற்று மாலை கார் ஒன்று சாலை ஓரத்தில் உள்ள சுமார் 60 அடி ஆழ கிணற்றுக்குள் பாய்ந்தது. கிணற்றுக்குள் பாய்வதை அந்த வழியாக வாகனங்களில் வந்து கொண்டிருந்தவர்கள் பார்த்து போலீசாருக்கு தகவல் அளித்தனர். ராட்சத கிரேன் மற்றும் தீயணைப்பு துறையினர், நீச்சல் வீரர்கள் ஆகியோருடன் அங்கு வந்த போலீசார், முதலில் நீச்சல் வீரர் நரசிம்மலுவை கிணற்றுக்குள் அனுப்பி என்ன நடந்துள்ளது என்பதை உணர்ந்து கொள்ள முயன்றனர்.

ஆனால் கிணற்றுக்குள் சென்ற நீச்சல் வீரர் நரசிம்மலு திரும்பி வரவில்லை. எனவே, தண்ணீருக்குள் மூழ்கி படமெடுக்கும் வீடியோ கேமராவை கிணற்றுக்குள் இறக்கி விட்டு கண்காணித்தனர். அப்போது, சுமார் 30 அடி ஆழத்தில் கார் இருப்பதும் காரின் மேற்பகுதியில் நீச்சல் வீரர் நரசிம்மலு இறந்த நிலையில் இருப்பதும் தெரியவந்தது.

தொடர்ந்து கிரேன் மூலம் கிணற்றுக்குள் இந்த காரை மீட்டனர். அப்போது, காருக்குள் இரண்டு பேரின் உடல்கள் இருப்பது தெரியவந்தது. மூன்று பேரின் உடல்களை கைப்பற்றிய போலீசார் நடத்திய விசாரணையில், கிணற்றில் பாய்ந்த காரில் இருந்தவர்கள் லட்சுமி (45), பிரசாந்த் (22) என்றும், அவர்கள் மேடக் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் எனவும், சித்தி பேட்டையில் உள்ள உறவினர் வீட்டுக்கு விசேஷத்தில் பங்கேற்றுவிட்டு திரும்பி வீட்டுக்கு செல்லும்போது விபத்து நடைபெற்றது என்பது தெரியவந்தது.

விபத்தில் சிக்கியவர்களை மீட்க முயன்றவரும் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அங்கிருந்தவர்களை சோகத்தில் ஆழ்த்தியது.

Views: - 411

0

0