ரகசிய இடங்களில் பதுக்கப்பட்ட அம்மோனியம் நைட்ரேட் மீட்பு..! தீவிரவாதிகளின் சதித்திட்டத்தை முறியடித்த பாதுகாப்புப் படை..!

13 August 2020, 2:36 pm
LeT_hideout_UpdateNews360
Quick Share

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத நெட்வொர்க்கை முறியடித்த பாதுகாப்புப் படையினர், லஷ்கர்-இ-தொய்பாவின் இரண்டு மறைவிடங்களை கண்டறிந்துள்ளனர். ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் அவந்திபோராவில் நடந்த பெரிய தேடுதல் நடவடிக்கையின் போது அதிக அளவிலான வெடிபொருட்கள் மற்றும் வெடிமருந்துகள் மீட்கப்பட்டது. இந்த சோதனையில், பெரிய ஆயுதங்களைத் தவிர, பெய்ரூட் வெடி விபத்துக்குக் காரணமான அதிக அளவிலான அம்மோனியம் நைட்ரேட்டை மீட்டெடுத்துள்ளது.

இது தொடர்பாக ஜம்மு காஷ்மீர் காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், பத்ரூ பார்சூ காடுகளில் பயங்கரவாதிகள் இருப்பது குறித்து கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் இந்த நடவடிக்கை தொடங்கப்பட்டது. அவந்திபோரா காவல்துறை, இராணுவத்தின் 50 ராஷ்டிரிய ரைஃபிள்ஸ் பிரிவு மற்றும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் 130 பட்டாலியன் (சிஆர்பிஎஃப்) ஆகியவற்றுடன் நேற்று இரவில் ஒரு நடவடிக்கையைத் தொடங்கியது.

“அதிகாலையில் நடந்த தேடலின் போது, தடைசெய்யப்பட்ட லஷ்கர்-இ-தொய்பாவின் இரண்டு மறைவிடங்கள் உடைக்கப்பட்டு அழிக்கப்பட்டன” என்று ஜம்மு காஷ்மீர் போலீசார் தெரிவித்தனர்.

அம்மோனியம் நைட்ரேட் தவிர, 1918 ஏ.கே. துப்பாக்கிக் குண்டுகள், இரண்டு கைக்குண்டுகள், யுபிஜிஎல் கையெறி குண்டு லாஞ்சர்கள் மற்றும் 4 யுபிஜிஎல் கையெறி குண்டுகளும் இந்த சோதனையின் போது மீட்கப்பட்டன. ஐந்து ஜெலட்டின் குச்சிகள், பைப் குண்டு மற்றும் ரகசிய ஆவணங்கள், ரூ 5,400 பணம், உணவு பொருட்கள், பாத்திரங்கள், எரிவாயு அடுப்புகள், எரிவாயு சிலிண்டர் போன்றவை சம்பவ இடத்திலிருந்து மீட்கப்பட்டுள்ளது.

பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டையில் ரகசிய இடத்தை அடைவதற்கு முன்பு பயங்கரவாதிகள் அந்த இடத்தை காலி செய்துவிட்டு தப்பித்ததாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே புதன்கிழமை, புல்வாமாவின் கம்ராசிபோரா கிராமத்தில் பாதுகாப்பு படையினருடன் ஏற்பட்ட மோதலின் போது ஒரு பயங்கரவாதி கொல்லப்பட்ட நிலையில், ஒரு இந்திய ராணுவ வீரர் உயிரிழந்தார். இந்த சம்பவத்தின் போது இரு இந்திய ராணுவ வீரர்கள் காயமடைந்தனர்.

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் அண்மையில் ஏற்பட்ட வெடி விபத்துக்களின் மூலம் நூற்றுக்கணக்கான மக்கள் பலியானதன் பின்னணியில் அம்மோனியம் நைட்ரேட் இருந்த நிலையில், தற்போது அதிக அளவிலான அம்மோனியம் நைட்ரேட் ஜம்மு காஷ்மீரில் கண்டறியப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 5

0

0