திருப்பதி கோவிலில் 2 கிராம் முதல் 10 வரையில் தாலி விற்பனை… புதிய திட்டத்தை அறிமுகப்படுத்திய தேவஸ்தானம்..!!

Author: Babu Lakshmanan
29 January 2024, 4:58 pm
Quick Share

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் 2024-25 நிதியாண்டுக்கான 5141.74 கோடி ரூபாய் வரவு செலவு திட்டத்திற்கு இன்று தேவஸ்தான அறங்காவலர் குழு ஒப்புதல் தெரிவித்துள்ளது.

திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு கூட்டம் திருப்பதி மலையில் இன்று அறங்காவலர் குழுவின் தலைவர் கருணாகர ரெட்டி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி மற்றும் தேவஸ்தான அதிகாரிகள், அறங்காவலர் குழு உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அறங்காவலர் குழு தலைவர் கருணாகர ரெட்டி 2024-25 நிதி ஆண்டிற்கான வரவு செலவு திட்டத்தை அதிகாரிகள் இன்று அறங்காவலர் குழு முன் தாக்கல் செய்தனர். 5141 கோடியே 74 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் தாக்கல் செய்யப்பட்ட அதிகாரிகளின் 2024-25 நிதி ஆண்டிற்கான வரவு செலவு திட்டத்திற்கு அறங்காவலர் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

நடப்பு நிதி ஆண்டில் இதுவரை ஏழுமலையானுக்கு பக்தர்கள் 1611 கோடி ரூபாயை காணிக்கையாக சமர்ப்பித்து இருந்த நிலையில், அடுத்த நிதியாண்டிலும் அதே அளவுக்கு காணிக்கை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது. தேவஸ்தானம் வங்கியில் செய்துள்ள நிரந்தர வைப்பு நிதிகள் மூலம் நடப்பு நிதி ஆண்டில் 1068 கோடியே 51 லட்ச ரூபாய் வட்டி வருமானம் தேவஸ்தானத்திற்கு கிடைத்துள்ளது.

அடுத்த நிதி ஆண்டில் வட்டி வருமானம் 1,167 கோடி ரூபாயாக அதிகரிக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டில் பிரசாத விற்பனை மூலம் 550 கோடி ரூபாய் கிடைத்துள்ள நிலையில், அடுத்த நிதியாண்டில் 600 கோடி ரூபாய் கிடைக்கும் என்றும், தரிசன டிக்கெட் விற்பனை மூலம் 328 கோடி ரூபாய் நடப்பு நிதியாண்டில் கிடைத்த நிலையில், அடுத்த ஆண்டும் அதே நிலை தொடரும் என்றும், கட்டண சேவை டிக்கெட்டுகள் விற்பனை மூலம் 140 கோடி ரூபாய் தற்போது கிடைத்துள்ள நிலையில் அடுத்த நிதியாண்டில் 150 கோடி ரூபாய் வரை கிடைக்கலாம் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஊழியர்களின் ஊதியத்திற்காக நடப்பு நிதியாண்டில் 1664 கோடி செலவு செய்யப்பட்டுள்ள நிலையில், அடுத்த நிதி ஆண்டில் ஊதியத்திற்காக 1733 கோடி ரூபாய் செலவு செய்யப்படும் என்று அப்போது அவர் கூறினார். மேலும், இதுவரை தேவஸ்தான நிர்வாகம் 2 கிராம், 5 கிராம், 10 கிராம் ஆகிய எடைகளில் தங்க டாலர்களை விற்பனை செய்து வருகிறது.

இந்த நிலையில், இனிமேல் 5 கிராம், 10 கிராம் ஆகிய எடையில் நான்கு டிசைன்களில் திருமணத்தில் பயன்படுத்தப்படும் தங்க தாலிகளை விற்பனை செய்ய தேவஸ்தான நிர்வாகம் முடிவு செய்துள்ளது. கடந்த காலங்களில் கல்யாண மஸ்த்து என்ற பெயரில் தேவஸ்தான நிர்வாகம் 32000 கூட்டு திருமணங்களை நடத்தியது.

தேவஸ்தானத்தின் கல்யாண மஸ்த்து திட்டத்தில் திருமணம் செய்து கொண்ட 32,000 தம்பதிகளில் ஒருவர் கூட மதம் மாறவில்லை என்பதை நாங்கள் நடத்திய சர்வே மூலம் தெரிந்து கொண்டிருக்கிறோம். தேவஸ்தானத்தின் கல்யாண மஸ்த்து திருமணங்களில் பயன்படுத்துவதற்காக இரண்டு கிராம் எடையுள்ள தங்க தாலியை தேவஸ்தானம் நிர்வாகம் நன்கொடையாக வழங்கியது.

ஏழுமலையான், பத்மாவதி தாயார் உருவங்கள் பதிக்கப்பட்ட அந்த தங்கத்தாலிகளின் மகிமை காரணமாக 32,000 தம்பதிகளில் ஒரே ஒரு தம்பதி கூட மதம் மாறவில்லை என்பதை உறுதி செய்து கொண்டிருக்கிறோம்.

எனவே, இனிவரும் காலங்களிலும் மதமாற்றத்தை தடுக்கும் வகையில் 5 கிராம், 10 கிராம் ஆகிய எடை கொண்ட தங்க தாலிகளை நான்கிற்கும் மேற்பட்ட டிசைன்களில் தயார் செய்து விற்பனை செய்ய தேவஸ்தான அறங்காவலர் குழு முடிவு செய்துள்ளது. ஏழுமலையான் திருவடிகளில் வைத்து பூஜிக்கப்பட்ட பின் விற்பனை செய்யப்பட இருக்கும் தங்கத்தாளிகளை தேவையான பக்தர்கள் பணம் செலுத்தி வாங்கி கொள்ளலாம்.

அடுத்த மாதம் மூன்று, நான்கு, ஐந்து ஆகிய தேதிகளில் திருப்பதி மலையில் பீடாதிபதிகள்,மடாதிபதிகள் ஆகியோர் பங்குபெறும் ஆன்மீக மாநாடு நடைபெற உள்ளது. அந்த மாநாட்டில் பங்கு பெற 57 பீடாதிபதிகள் ஒப்புதல் தெரிவித்துள்ளனர் என்றும் அப்போது தெரிவித்தார்.

Views: - 275

0

0