மேற்கு வங்காள சட்டசபை தேர்தல்: 6ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது..!!

22 April 2021, 8:30 am
wb election - updatenews360
Quick Share

கொல்கத்தா: மேற்குவங்காளத்தில் 43 தொகுதிகளில் இன்று 6ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.

மேற்கு வங்காளத்தில் இன்று 6ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்க பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 8 கட்டமாக சட்டசபை தேர்தல் நடந்து வரும் மேற்கு வங்காளத்தில் 5 கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்திருக்கிறது.

இந்நிலையில், 6வது கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. மாநிலத்தின் வடக்கு 24 பர்கானாக்கள், நாடியா, கிழக்கு பர்தமான், உத்தர் தினாஜ்பூர் ஆகிய 4 மாவட்டங்களை சேர்ந்த 43 தொகுதிகளில் இந்த வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மொத்தம் 14,480 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

6ம் கட்ட தேர்தலில் வாக்களிக்க 1.03 கோடி வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளனர். இதில் 50.65 லட்சம் பெண் வாக்காளர்களும், 256 மூன்றாம் பாலினத்தவர்களும் அடங்குவர். இன்றைய தேர்தலில் 306 வேட்பாளர்கள் களம் காணுகின்றனர்.

வாக்குப்பதிவு நடைபெறும் 43 தொகுதிகளிலும் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. மக்கள் சுதந்திரமாகவும், அமைதியாகவும் வாக்களிப்பதற்காக மாநில போலீசாருடன் இணைந்து, 1,071 கம்பெனி துணை ராணுவமும் களமிறக்கப்பட்டு உள்ளனர்.

வாக்குப்பதிவு தொடங்கிய உடன் மக்கள் நீண்ட வரிசையில் நின்று தங்கள் வாக்குகளை செலுத்தி வருகின்றனர். கடந்த 4ம் கட்ட தேர்தலின் போது சீத்தல்குச்சி தொகுதிக்கு உள்பட்ட ஜார்பட்கி என்ற பகுதியில் உள்ள வாக்குச்சாவடிக்கு அருகே திடீரென மோதல் ஏற்பட்டது. இதில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 478

0

0