‘பைக்குல வந்தாதானே ஃபைன் போடுவீங்க’ : போலீசாரின் அபராதத்துக்கு பயந்து பைக்கை தீயிட்டு கொளுத்திய வியாபாரி!!

Author: Udayachandran RadhaKrishnan
27 November 2021, 7:32 pm
Bike Fired -Updatenews360
Quick Share

தெலுங்கானா : போலீசார் தொடர் அபராதம் விதிப்பதால் மன உளைச்சல் ஏற்படுவதாக கூறி தன்னுடைய மோட்டார் சைக்கிளை வியாபாரி ஒருவர் தீ வைத்து கொளுத்திய சம்பவம் அரங்கேறியுள்ளது.

தெலுங்கானா மாநிலம் அடிலாபாத்தை சேர்ந்தவர் மக்பூல். அடிலாபாத்தில் வியாபாரம் செய்து வரும் மக்பூல், திடீரென மக்கள் நிறைந்த சாலையில் தன்னுடைய இருசக்கர வாகனத்துக்கு தீ வைத்து எரித்தார்.

அப்போது சாலை சந்திப்பில் போக்குவரத்து போலீசார மற்றும அங்கிருந்த பொதுமக்கள் மோட்டார் சைக்கிளில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர்.

பின்னர் இது குறித்து மக்பூலிடம் நடத்திய விசாரணையில், தொடர்ந்து தனது பைக்குக்கு அபராதம் விதிப்பதால் இவ்வாறு செய்ததாக கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.

மக்பூல் கடந்த சில நாட்களுக்கு முன் தனது பைக்கில் சென்று கொண்டிருந்தபோது தடுத்து நிறுத்திய போலீசார் இரண்டாயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளனர். உடனே அபராதத்தை செலுத்தியுள்ளார்.

இந்த நிலையில் இன்று மீண்டும் தடுத்து நிறுத்தி மேலும் 2000 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என்று போலீசார் கூறியுள்ளனர். தற்போது வியாபார விஷயமாக சென்று கொண்டிருப்பதால் பின்னர் செலுத்துகிறேன் என கூறியுள்ளார்.

ஆனால் போலீசார் அபராதத்தை செலுத்திவிட்டு பைக்கை எடுத்து செல்லுமாறு கூறிவிட்டனர். ஏதேதோ காரணங்களை கூறி போலீசார் தொடர்ந்து இதுபோல் செயல்படுகின்றனர். இதனால் எனக்கு பெரும் மன உளைச்சல் ஏற்படுகிறது.

எனவே இந்தப் பிரச்சினையில் இருந்து தப்பிப்பதற்காக ஒரே வழி மோட்டார் சைக்கிளை அழித்து விடுவது ஒன்றுதான் என்று முடிவுசெய்து தீ வைத்து எரித்ததாக மக்பூல் கூறினார். எலிக்கு பயந்து வீட்டை கொளுத்தின கதையாக இருப்பதாக அப்பகுதி மக்கள் புலம்பினர்.

Views: - 233

0

0