7வது நாளாக தொடரும் விவசாயிகள் போராட்டம்: மத்திய அரசுடன் நாளை அடுத்த கட்ட பேச்சுவார்த்தை..!!

2 December 2020, 9:08 am
Farmers_Delhi_Protest_UpdateNews360
Quick Share

புதுடெல்லி: டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் 7வது நாளாக இன்றும் தொடர்கிறது. மத்திய அரசுடன் நாளை அடுத்த கட்ட பேச்சுவார்த்தை நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு 3 வேளாண் சட்டங்களை கடந்த செப்டம்பர் மாதம் கொண்டு வந்தது. இந்த சட்டங்களால் வேளாண் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்கும் முறை ஒழிக்கப்பட்டு, நாட்டின் முதுகெலும்பான விவசாயமானது, பெரு நிறுவனங்கள் மயமாக மாறி விடும் என்று விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.

இந்நிலையில் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தும் விதமாக பஞ்சாப், அரியானா, உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் என வட மாநிலங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லி எல்லைகளை முற்றுகையிட்டு தொடர்ந்து 6வது நாளாக நேற்று போராட்டம் நடத்தினர். கண்ணீர்ப்புகை குண்டுகளை வீசியும், தண்ணீரை பீய்ச்சியடித்தும் போராட்டக்காரர்கள் போராட்டத்தை தொடர்ந்தனர்.

இதனை முடிவுக்கு கொண்டு வரும் விதமாக, விவசாயிகள் போராட்டம் குறித்து மூத்த மந்திரிகள் அமித் ஷா (உள்துறை), ராஜ்நாத் சிங் (ராணுவம்) நரேந்திரசிங் தோமர் (விவசாயம்), பியுஷ் கோயல் (ரயில்வே, வர்த்தகம், தொழில்), பா.ஜ.க. தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோர் நேற்று தீவிர ஆலோசனை மேற்கொண்டனர். இதனையடுத்து, டெல்லி விஞ்ஞான பவனில் பிற்பகலில் விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்துவதாக தகவல்கள் வெளியாகின.

அதன்படி பிற்பகலில் 35 விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளை மத்திய அரசு அழைத்து நேரடி பேச்சு வார்த்தை நடத்தியது. இதில், விவசாய அமைச்சர் நரேந்திர சிங் தோமர், ரயில்வே அமைச்சர் பியுஷ்கோயல், வர்த்தக ராஜாங்க மந்திரியும், பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த எம்.பி.யுமான சோம் பர்காஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். 35 விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். அவர்கள், பேச்சுவார்த்தையின்போது 3 விவசாய சட்டங்களையும் திரும்பப்பெற வேண்டும் என்ற கோரிக்கையை ஒருமனதாக வலியுறுத்தி கூறினர்.

3 விவசாய சட்டங்கள் தொடர்பான பிரச்சினைகளை ஆராய்வதற்கு 5 உறுப்பினர்களை கொண்ட குழுவை அமைக்கலாம் என மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இதனை விவசாய சங்க பிரதிநிதிகள் ஏற்க மறுத்து விட்டனர். இதனால் 3 மணி நேரம் நடந்த பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் ஏற்படவில்லை. எனவே நாளை அடுத்த சுற்று பேச்சு வார்த்தை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு மத்தியில் விவசாயிகள் போராட்டம் இன்று 7வது நாளாக இன்றும் நீடிக்கிறது. விவசாயிகள் உடனான பேச்சுவார்த்தையின் போது, புதிய வேளாண் சட்டங்களில் உள்ள குறிப்பிட்ட பிரச்சினைகளை கண்டறிந்து, அதுகுறித்து அரசின் பரிசீலனைக்கு இன்று தெரிவிக்கும்படி விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளிடம் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அந்த பிரச்சினைகள் தொடர்பாக நாளை நடைபெறும் அடுத்தகட்ட பேச்சுவார்த்தையின் போது விவாதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளதாக மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

Views: - 0

0

0