மெட்ரோ ரயிலில் பயணம் செய்த இதயம்! இறந்தும் இன்னொரு உயிரை காப்பாற்றிய விவசாயி!!

2 February 2021, 7:15 pm
heart Transplanataion - Updatenews360
Quick Share

தெலுங்கானா : ஹைதராபாத் ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் இதயமாற்று சிகிச்சைக்காக மெட்ரோ ரயில் மூலம் இதயம் பயணம் செய்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே வாரங்களை சேர்ந்த விவசாயி நரசிம்மா ரெட்டி மூளைச்சாவு அடைந்த நிலையில் அவருடைய உடல் உறுப்புகளை தானம் செய்ய குடும்ப உறுப்பினர்கள் முன் வந்தனர். அதனடிப்படையில் நரசிம்மராவின் இதயம், கல்லீரல், சிறுநீரகம் ஆகியவை உள்ளிட்ட எட்டு உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டன.

இந்தநிலையில் ஹைதராபாதில் எல்.பி நகரில் உள்ள காமினேனி மனையில் சிகிச்சை பெற்று மூளைச்சாவு அடைந்த விவசாயி நரசிம்மா ரெட்டி இதயத்தை ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நபர் ஒருவருக்கு பொருத்த முடிவு செய்யப்பட்டது.

காமிநேனி மருத்துவமனையிலிருந்து ஜூபிலிஹில்ஸ் அப்பல்லோ மருத்துவமனைக்கு சாலை மார்க்கமாக இதயத்தை கொண்டு செல்வதில் போக்குவரத்து சிக்கல்கள் ஏற்படும் என்று கருதிய அதிகாரிகள் அதனை ஹைதராபாத் மெட்ரோ ரயில் மூலம் கொண்டு செல்ல முடிவு செய்தனர்.

இதயத்தை எல்பி நகர் பகுதியில் இருந்து ஜுப்ளி ஹில்ஸ் பகுதிக்கு கிரீன் சேனல் என்று கூறப்படும் தடையில்லா போக்குவரத்து மூலம் கொண்டு செல்வதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டன.

தொடர்ந்து காமிநேனி மருத்துவமனையிலிருந்து எல்பி நகர் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு கிரீன் சேனல் மூலம் ஐந்து நிமிட நேரத்தில் இதயத்தை ஆம்புலன்ஸில் கொண்டு சென்றனர். தொடர்ந்து அங்கிருந்து 30 நிமிட நேரத்தில் பயணிகள் இல்லாத ஒரு மெட்ரோ ரயில் மூலம் அந்த இதயம் ஜூப்ளி ஹில்ஸ் ரயில் நிலையத்திற்கு நான் ஸ்டாப்பாக கொண்டு செல்லப்பட்டது.

தொடர்ந்து அங்கிருந்து அப்போலோ மருத்துவமனைக்கு இதயம் கொண்டு செல்லப்பட்ட நிலையில் தற்போது அந்த நபருக்கு இதய மாற்று அறுவை சிகிச்சை நடைபெறுகிறது. சுமார் 7 மணி நேரத்திற்கு பிறகு அறுவை சிகிச்சை முடிவடையும் என்று கூறப்படுகிறது.

Views: - 0

0

0