மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடக்கம் : 47 மசோதாக்கள் மீது விவாதம்..!

14 September 2020, 9:14 am
Quick Share

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொடர்ச்சியான பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் சூழலில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் மிகுந்த முக்கியத்துவம் வாந்ததாக கருதப்படுகிறது.

இன்று முதல் வரும் அக்டோபர் ஒன்றாம் தேதி வரை நடைபெறும் கூட்டத்தொடர் சனி, ஞாயிறு விடுமுறையின்றி தொடர்ந்து நடத்தப்படவுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடத்தப்படுவதில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

இரு அவைகளும் வெவ்வேறு நேரங்களில் நடத்தப்படவுள்ளது, கோவிட்-19 நெகடிவ் சான்று இருந்தால் மட்டுமே எம்.பிக்களுக்கு உள்ளே அனுமதி வழங்கப்படும். மேலும், முகக்கவசம் அணிவது கட்டாயம், கூட்டத்தொடருக்கு முன்பான அனைத்துக் கட்சிக் கூட்டம் ரத்து, மொபைல் ஆப் மூலம் வருகைப் பதிவை உறுதிப்படுத்துதல், கேள்வி நேரம் ரத்து, குறுகிய நேரம் மட்டுமே ஜீரோ ஹவர், தனி நபர் மசோதாக்களுக்கு அனுமதி மறுப்பு உள்ளிட்டவை இவற்றில் அடங்கும்.

மேலும் நாடாளுமன்றத்திற்கு வருகை புரிவோரை தொடாத வகையில் செக்யூரிட்டி ஸ்கேனிங், தெர்மல் ஸ்கேனிங் செய்யப்படவுள்ளன. தொடர்ந்து 18 நாட்கள் நடைபெறவுள்ள இந்த கூட்டத்தொடரில் 47 மசோதாக்கள் விவாதிக்கப்படவுள்ளன.

முக்கியமாக பெருந்தொற்று நோய் சட்ட திருத்த மசோதா, அத்தியாவசிய பொருட்கள் சட்ட திருத்த மசோதா, வங்கிகள் ஓழுங்குமுறை சட்ட திருத்தம் உள்ளிட்டவை விவாதிக்கப்படவுள்ளது. மாநிலங்களவை காலை 9 மணிக்கு தொடங்கி, பிற்பகல் ஒரு மணி வரையும் , மக்களவை பிற்பகல் 3 மணியில் இருந்து இரவு 7 மணி வரையும் நடைபெறும்.

Views: - 7

0

0