இந்த அவமதிப்பு.. பெண்மணி என்பதாலா? இல்ல பழங்குடி என்பதாலா?.. திருமா.,வின் கேள்வியும்… பாஜகவின் பதிலும்…!!

Author: Babu Lakshmanan
1 April 2024, 10:43 am
Quick Share

குடியரசு தலைவர் திரௌபதி முர்முவை அவமதித்ததாக பிரதமர் மோடிக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

முன்னாள் துணை பிரதமர் எல்.கே.அத்வானிக்கு நேற்று ‘பாரத ரத்னா’ விருது வழங்கப்பட்டது. குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு அவரது இல்லத்துக்கு சென்று விருதை நேரில் வழங்கினார். அப்போது, விருதைப் பெற்ற அத்வானியின் அருகில் பிரதமர் மோடி அமர்ந்திருப்பது போன்றும், குடியரசு தலைவர் திரௌபதி முர்மு மட்டும் நின்றிருப்பது போன்ற புகைப்படம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், இந்த புகைப்படத்தை பகிர்ந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், பிரதமர் மோடிக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், பிரதமர், மேனாள் துணைபிரதமர் ஆகியோருக்கு தேசத்தின் முதல் குடிமகவான குடியரசுத் தலைவரை எங்ஙனம் மதிக்க வேண்டும் என்பது தெரியாதா?

தேசத்தின் தலைமை, குறிப்பாக அரசின் தலைமை, குடியரசுத் தலைவர் தான் என்பதை வரையறுத்துக் கூறும் அரசமைப்புச் சட்டத்தையேனும் மதிக்க வேண்டும் என்பதுகூட தெரியாதா?

இந்த அவமதிப்பு-
இவர் பெண்மணி என்பதாலா? அல்லது
இவர் பழங்குடி என்பதாலா?
அல்லது
அரசமைப்புச் சட்டம் ஒரு பொருட்டில்லை என்பதாலா? இப்படியொரு படம் வெளியானது அறியாமல் நிகழ்ந்ததா? திட்டமிட்டே நடந்ததா?

குடியரசுத் தலைவரை நிற்கவைத்து படம்பிடித்து வெளியிடுவது என்னவகை பண்பாடு?
பெரும் அதிர்ச்சியளிக்கிறது, எனக் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளையில், விருதை கொடுத்த பிறகு, குடியரசு தலைவர் திரௌபதி முர்மு இருவருக்கும் எதிரே அமர்ந்திருப்பது போன்ற புகைப்படத்தை பகிர்ந்து பாஜகவினர் விளக்கம் கொடுத்துள்ளனர். அதாவது, விருது வழங்கும் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை பகிர்ந்து அவதூறு பரப்புவதாகவும், அரசியலுக்காக திருமாவளவன் இதுபோன்று செய்வதாகவும் குற்றம்சாட்டுகின்றனர்.

Views: - 205

0

0