திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆழ்வார் திருமஞ்சனம் : மதியத்திற்கு மேல் பக்தர்களுக்கு அனுமதி

Author: Babu Lakshmanan
11 January 2022, 1:04 pm
Quick Share

திருப்பதி; ஏழுமலையான் கோவிலில் கோவில் ஆழ்வார் திருமஞ்சனத்திற்கு பிறகு, மதியத்திற்கு மேல் பக்தர்கள் சாமி கும்பிட அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலை முழுவதும் கழுவி சுத்தம் செய்யும் பணி, ஒவ்வொரு ஆண்டும் வருடத்தில் நான்கு முறை அதாவது உகாதி, ஆனி வார ஆஸ்தானம், வருடாந்திர பிரம்மோற்சவம், வைகுண்ட ஏகாதசி ஆகிய திருநாட்களுக்கு முன் வரும் செவ்வாய்க்கிழமை அன்று நடைபெறும்.

இந்த நிலையில் இம்மாதம் 13-ஆம் தேதி வைகுண்ட ஏகாதசி திருவிழா நடைபெற உள்ளது. எனவே அதற்கு முந்தைய செவ்வாய்கிழமையான இன்று ஏழுமலையான் கோவிலில் கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற்றது.

அதிகாலை வழக்கமான சேவைகள் நடைபெற்ற பின் தேவஸ்தான ஊழியர்கள் ஏழுமலையான் கோவில் கருவறை துவங்கி தங்க கோபுரம் தங்க கொடிமரம், கோவில் வளாகத்தில் உள்ள துனை கோவில்கள் பிரசாத தயாரிப்பு கூடம், பூஜை பாத்திரங்கள், நைய்வேத்திய பாத்திரங்கள் ஆகியவை உள்ளிட்ட அனைத்தையும் கழுவி சுத்தம் செய்தனர்.

தொடர்ந்து சந்தனம், நாமக்கட்டி, பச்சைக் கற்பூரம், கிச்சலி பொடி ஆகியவை உள்ளிட்ட பல்வேறு சுகந்த திரவியங்கள் அடங்கிய கலவை கோவில் சுவர்களுக்கு பூசப்பட்டது. அதன் பின்னர் பகல் பதினோரு மணி அளவில் தேவஸ்தான ஜீயர்கள் புதிய பட்டாடையை தலைமேல் சுமந்து கொடிமர பிரதக்ஷணம், விமான பிரதக்ஷணம் ஆகியவற்றை நடத்தி ஏழுமலையானுக்கு சமர்ப்பித்தனர்.

தொடர்ந்து பகல் 11 மணிக்கு மேல் பக்தர்கள் சாமி கும்பிட அனுமதி அளிக்கப்பட்டது. கோவில் ஆழ்வார் திருமஞ்சனத்தை முன்னிட்டு ஏழுமலையான் கோவிலில் இன்று விஐபி பிரேக் தரிசனம் ரத்து செய்யப்பட்டிருந்தது.

Views: - 233

0

0