பத்திரிகை சுதந்திரம் மீதான தாக்குதல்..! அர்னாப் கோஸ்வாமி கைதுக்கு அமித் ஷா கண்டனம்..!

4 November 2020, 3:42 pm
Amit_Shah_UpdateNews360
Quick Share

ரிபப்ளிக் தொலைக்காட்சியின் தலைமை ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி கைது செய்யப்பட்டதற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கண்டித்துள்ளதோடு அதிகார துஷ்பிரயோகம் செய்யப்படுவதாக குற்றம் சாட்டியுள்ளார்.

காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் இத்தகைய நடவடிக்கைகள் எதிர்க்கப்படும் என்று ஷா தனது ட்வீட்டில் எச்சரித்தார்.

“ரிபப்ளிக் தொலைக்காட்சி மற்றும் அர்னாப் கோஸ்வாமிக்கு எதிராக அரச அதிகாரத்தை அப்பட்டமாக தவறாகப் பயன்படுத்துவது தனிநபர் சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்தின் 4’வது தூண் மீதான தாக்குதல். இது அவசரநிலையை நமக்கு நினைவூட்டுகிறது. சுதந்திர பத்திரிகை மீதான இந்த தாக்குதல் எதிர்க்கப்பட வேண்டும்.” என அமித் ஷா ட்வீட் செய்துள்ளார்.

பாஜகவின் மற்ற மூத்த தலைவர்களான ஜே.பி.நட்டா, டாக்டர் எஸ்.ஜெய்சங்கர், தேவேந்திர ஃபட்னாவிஸ் ஆகியோரும் அர்னாப் மீதான நடவடிக்கையை கண்டித்துள்ளனர்.

2018’ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட தற்கொலையைத் தூண்டுவது தொடர்பான ஒரு வழக்கில் அர்னாப் மும்பையில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து இன்று காலை கைது செய்யப்பட்டார். நீண்ட காலமாக கிடப்பில் இருந்த இந்த வழக்கு தற்போது போலீசாரால் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே கைது செய்ய முயன்றபோது காவல்துறையினரால் தான் தாக்கப்பட்டதாக அர்னாப் குற்றம் சாட்டியுள்ளார். அர்னாபின் வழக்கறிஞர் இப்போது அவரது குடும்ப உறுப்பினர்களை சந்திக்க முடியாத நிலையில் இருப்பதாகவும், அவரது வீடு மூன்று மணி நேரம் போலீசாரால் சுற்றி வளைக்கப்பட்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். அர்னாபின் கையில் ஏற்பட்ட காயத்திற்கும் போலீஸ் தாக்குதல் தான் காரணம் என அவர் மேலும் கூறினார்.

Views: - 23

0

0