பிரேதப் பரிசோதனை அறிக்கையில் இறந்த நேரம் குறிப்பிடாதது ஏன்..? சந்தேகம் கிளப்பும் சுஷாந்த் சிங் தந்தையின் வழக்கறிஞர்..!

15 August 2020, 6:36 pm
vikas_singhani_updatenews360
Quick Share

தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படும் பாலிவுட் நடிகர் சுஷாந்த் பிரேத பரிசோதனை அறிக்கையில், அவர் இறந்த நேரம் குறிப்பிடப்படவில்லை என்று சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் தந்தையின் வழக்கறிஞர் விகாஸ் சிங் குற்றம் சாட்டியுள்ளார்.

“நான் பார்த்த பிரேத பரிசோதனை அறிக்கையில் இறப்பு நேரம் குறிப்பிடப்படவில்லை. இது ஒரு முக்கியமான விவரம். அவர் கொல்லப்பட்ட பின்னர் தூக்கிலிடப்பட்டாரா அல்லது தூக்குப்போட்டு இறந்தாரா என்பதை மரண நேரத்தோடு கண்டறிய முடியும்.”என்று விகாஸ் சிங் மேற்கோள் காட்டினார்

மும்பையில் உள்ள டாக்டர் ஆர்.என்.கூப்பர் நகராட்சி பொது மருத்துவமனையில் ராஜ்புத்தின் பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது. அவரது போஸ்ட்மார்ட்டம் அறிக்கையின்படி, நடிகர் தூக்கிலிடப்பட்டதால் மூச்சுத்திணறல் காரணமாக இறந்தார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

34 வயதான நடிகர் சுஷாந்த், கடந்த ஜூன் 14 அன்று மும்பையில் பாந்த்ராவில் உள்ள தனது குடியிருப்பில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார்.

மகாராஷ்டிரா போலீசார் பீகார் போலீசாருடன் ஒத்துழைக்கவில்லை என்று குற்றம் சாட்டப்பட்ட நிலையில், ராஜ்புத்தின் மரணம் தொடர்பாக மும்பையில் இதுவரை எஃப்.ஐ.ஆர் கூட பதிவு செய்யப்படவில்லை என்று பீகார் அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. ராஜ்புத்தின் பிரேத பரிசோதனை அறிக்கை பீகார் போலீசாருக்கு மகாராஷ்டிரா போலீசாரால் வழங்கப்படவில்லை என்றும் அது குற்றம் சாட்டியிருந்தது.

மத்திய புலனாய்வுப் பிரிவு (சிபிஐ) தற்போது நடிகரின் தற்கொலை வழக்கை விசாரித்து வருகிறது.

பீகார் அரசாங்கத்தின் பரிந்துரைகளுக்குப் பிறகு கடந்த வாரம் இந்த வழக்கை எடுத்துக் கொண்ட சிபிஐ, ராஜ்புத்தின் காதலி ரியா சக்ரவர்த்தி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் மீது வழக்கு பதிவு செய்தது.

கடந்த மாதம், ராஜ்புத்தின் தந்தை கே.கே.சிங், பாட்னாவில் ராஜ்புத்தின் காதலி ரியா சக்ரவர்த்தி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் உட்பட 6 பேருக்கு எதிராக புகார் அளித்திருந்தார்.

ரியா சக்ரவர்த்தி மற்றும் பலர் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. முன்னதாக உச்சநீதிமன்றம், கடந்த ஆகஸ்ட் 5’ம் தேதி, திறமையான கலைஞரின் துரதிர்ஷ்டவசமான மரணத்தின் பின்னணியில் உள்ள உண்மை வெளிவர வேண்டும் என்று கூறி மத்திய அரசின் ஆலோசனையின் பேரில் சிபிஐக்கு மாற்றியது.

Views: - 0

0

0